tamilnadu

img

இந்நாள் இதற்கு முன்னால் மே 03

1978 - உலகின் முதல் ஸ்பாம் செய்தி பரப்பப்பட்டது. குறிப்பிட்ட முகவரிக்கு அல்லாமல், அனைவருக்கும் அனுப்பப்படும் தேவையற்ற மின்னஞ்சல்கள் ஸ்பாம் என்று அழைக்கப்படுகின்றன. டிஜிட்டல் எக்விப்மெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் புதிய கணினி கிடைப்பதைப்பற்றி, ஆர்ப்பாநெட் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருந்த 393 கணினிகளுக்கு இந்தச் செய்தி அனுப்பப்பட்டது. பொதுவாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவே தகவல்கள் அனுப்பப்படும். அக்காலத்தில், இந்நிறுவனத்திலிருந்த கார்ல் கார்ட்லி என்ற உதவியாளர் (சோம்பேறித்தனத்தால்!) ஒரே செய்தியை அனைவருக்கும் அனுப்ப, அது கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. இந்த நிகழ்வு நடந்தபோது ஸ்பாம் என்ற பெயரே உருவாகியிருக்கவில்லை. 1970களில் பிபிசி தொலைக்காட்சியில் நகைச்சுவைக் காட்சிகளை நடத்திய மாண்ட்டி பைத்தான் என்ற குழுவினர், ஒரு காட்சியில் ஸ்பாம் என்ற சொல்லைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தியதையடுத்து, பிறரது குரலை மறைக்க அவ்வாறு கூறுவது பரவியது. (ஸ்பாம் என்றால் தகரப்பேழையில்(டின்) அடைக்கப்பட்ட, சமைத்த இறைச்சி என்று பொருள்.) இதைத் தொடர்ந்து, புல்லட்டின் போர்ட் அமைப்புகளில் பிறரது தகவல்களைப் பின்தள்ள, மீண்டும் மீண்டும் ஸ்பாம் என்று உள்ளிடத் தொடங்கினர். 1990களில் தேவையற்ற மின்னஞ்சல்களுக்கு இது பெயரானது. (இந்த மாண்ட்டி பைத்தான் குழுவினர் நகைச்சுவைகளுக்கிடையே கற்றுத்தரும் தகவல்களையும் கூறுவார்கள் என்பதால், அவர்களை மரியாதை செய்யவே பைத்தான் மொழிக்கு அப்பெயர் சூட்டப்பட்டது!) இதற்கெல்லாம் நூறாண்டுகளுக்கு முன்பே, வெஸ்டர்ன் யூனியன் தந்திச்சேவையிலிருந்த, பலருக்கும் அனுப்பும் வசதியைப் பயன்படுத்தி, 1864இல் ஒரு பல் மருத்துவர், பலருக்கும் விளம்பரச் செய்தியை அனுப்பி, முதல் ஸ்பாம்மராகிவிட்டார்! கிரீன் கார்ட் பெற உதவுவதாக முதல் பெரிய விளம்பர ஸ்பாமை, ஒரு வழக்கறிஞர் தம்பதியும், முதல் நிதிதிரட்டும் ஸ்பாமை, சிட்டிஹோப் என்ற தொண்டு நிறுவனமும் 1994இல் அனுப்பினர். 1999இல் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உருவாக்கப்பட்டதுபோலத் தோற்றமளிக்கும்படி ஸ்பாம்களை உருவாக்கும் மென்பொருளை கான் ஸ்மித் என்ற ஹேக்கர் உருவாக்கினார். ஸ்பாம்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலிருந்த நிலையில், மொழிபெயர்ப்பு மென்பொருட்களைக்கொண்டு, உள்ளூர் மொழியிலேயே அனுப்புவது 2009இல் தொடங்கியது. இன்று ஒவ்வொரு நாளும் 1450 கோடி ஸ்பாம்கள் அனுப்பப்படுகின்றன. அதாவது, மொத்த மின்னஞ்சல்களில் 45 சதவீதம் ஸ்பாம்களே!அறிவுக்கடல்

;