tamilnadu

img

தமிழகத்தின் மரபுவழிப் பண்பாடு மதநல்லிணக்கம் - - முனைவர் மு. பெ. சத்தியவேல்முருகனார்

அமெரிக்காவின் சிகாகோ நகரில், கொலம்பஸ் ஹாலில் உலகமெங்கி லும் இருந்து வந்த மதத் தலை வர்கள் திரளாகக் கூடி விவாதித்தார்கள். அந்தக் கூட்டத்தில் அத்தனை பேரும் லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன் என்று அழைத்துப் பேச்சைத் துவக்கினார்கள். விவே கானந்தர்  பேசும்போது, சகோதர சகோதரிகளே (பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்) என்று அழைத்துப் பேச்சைத் துவக்கினார். மற்ற வர்களின் அழைப்பில்  அந்நியத்தன்மை இருந்தது. ஆனால் விவேகானந்தர் அழைப்பில் இணக்கம், அன்பு, சகோதரத்துவம் இருந்தது. அந்தப் புதிய அழைப்பு அவைக்கு ஆச்சரியத்தை அளித்ததுஎன்பது வரலாறு.  இந்த வரலாற்றின் பின்னணியில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம், அந்தக் கூட்டத்திற்கு விவேகானந்தரை அனுப்பியது சிற்றரசர் சேதுபதி என்னும் தமிழர்என்பது. இந்த அரங்கிலே அமர்ந்திருப்பவர்களை நான் விவேகானந்தராகப் பார்க்கிறேன். தமிழர்களின் எண்ணம் பரந்துப்பட்டது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கணியன் பூங்குன்றனார் பாடினாரே, அதிலே நல்லிணக்கம் அடங்கியுள்ளது. அந்த மரபு நம்முடையது என்பதால்தான் அதனை உல கெங்கும் கொண்டுசெல்ல விவேகானந்த ருக்கு உதவினார் சிற்றரசர் சேதுபதி. 

எல்லா மதங்களும் நல்லவானாக இரு, நல்லதைச் செய், அன்பாக இரு என்றுதான் கூறுகின்றன. எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டும், அதற்கு இந்த மதங்கள் உதவ வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம். ஒரு சமூகத்தில் 100க்கு 90 விழுக்காடு பேர் நாகரிகம் கருதி நல்லவர்களாக இருக்கிறோம்.  அல்லது இருப்பதாக நடிக்கிறோம். ஆனால் மதத்திற்குத் தேவை நடிப்பு அல்ல; இயல்பாக நல்லவனாக இருப்பதே.  ஒரு மன்னன் கொடைவள்ளலாக இருந்தான். அந்த மன்னன் வாரி வாரி வழங்கினான். இப்படி வாரி வாரி வழங்குகிறாயே ஏன் எனப் புலவர்களும், மற்றவர்களும் மன்னனிடம் கேட்டார்கள். இன்றைய தலைமுறைக்குப் புரிவது போல் சொல்வதென்றால் நீங்கள் நிறைய புண்ணியத்தைச் சம்பாதித்து மேலோகத்தில் நல்ல இடத்தில் அமர்ந்து மானாட மயிலாட பார்ப்பதற்கா என்று கேட்டார்கள். அதற்கான மன்னரின் பதில்தான் முக்கியம்.  இவ்வுலகில் பொன்னையும் பொருளையும் வாரி வழங்கி விட்டு மேல் உலகில் சுகத்தை அனுபவிப்பது என்றால் அது வியாபாரமல்லவா எனக் கேட்கிறார். கொடை என்பது ஒரு முதலீடா? இல்லை .  நான் வியாபாரியில்லை எனக் கூறுகிறார்.  மேலும் நான் சிறுவனாக இருந்த போது என்னைச் சுற்றியிருந்த முன்னோர்கள் மற்றவர்க ளுக்கு வாரி வாரி வழங்கி னார்கள். அதைப் பார்த்துப் பார்த்து எனது கைகள் இப்போது வாரி வாரி வழங்குகிறது என்றார். அதுபோல் நாம் இயல்பாகவே நல்லவர்க ளாக இருக்க வேண்டும்.  ஒரு நாடு உயர்வான இடத்தில் இருப்பதாலோ, வல்லரசாக இருப்பதாலோ அது நல்லநாடு என்று பொரு ளாகாது. அங்கு வாழ்பவர்கள் இயல்பாக நல்லவர்களாக வாழ்கிறார்கள் என்றால் அதுதான் நல்லநாடு என ஒளவை பாட்டி கூறுகிறார்.

எங்கும் நிறைந்தவர் கடவுள், எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்றால், பிற மத வழிபாட்டிடங்களிலும் இருப்பார் அல்லவா? அப்படியென்றால் ஏன் இடிக்கவேண்டும்?  கடவுளே தான் இருக்கும் இடத்தை இடியுங்கள் என்றோ குண்டு வையுங்கள் என்றோ கூறுவாரா? இந்த சிந்தனை அனைவரிடமும் இல்லாமல்  போனது ஏன்? ஒவ்வொருவர் நம்பிக்கையையும் மதிக்க வேண்டும். ஒருவரின் நம்பிக்கையை சீர்குலைப்பது என்பது அவரது கல்லீரலில் ஆணி அடிப்பது போலாகும். கிட்டாதது கிட்டுவதற்கும், எட்டாதது எட்டுவதற்கும் முதல் மூலதனம் நம்பிக்கைதான். அடுத்தவர்கள் நம்பிக்கைக்கு மதிப்பளித்து நாம் வாழவேண்டும். எனவே யாருடைய நம்பிக்கையிலும் பிறர் தலையிடக் கூடாது. மிகப்பெரிய மகான்களுக்கெல்லாம்  மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், அந்த மகான்கள் இறப்பதற்காக சிலர் காத்துக்கிடக்கிறார்கள். இறந்தபின் சிலை வைப்பார்கள். அந்த மகான் கூறிய அற்புதமான கருத்துகளை, கொள்கைகளை அந்த சிலையின் கீழே வைத்து அந்த சிலர் மூடிவிடுவார்கள். இப்படிப்பட்ட நிலை மாற வேண்டும். நாம் மற்ற மதங்களிலே இருக்கும் நற்பண்புகளைப் பேசவேண்டும். இதற்கான முயற்சியாகத்தான்  மதநல்லிணக்க மாநாடு நடைபெறுகிறது என்று நம்புகிறேன் . இந்த முயற்சி  தமிழகத்தோடு நின்று விடக்கூடாது. நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் . 

 ( தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சென்னையில் நடத்திய மதநல்லிணக்க மாநாட்டில் நிகழ்த்திய உரையின் சுருக்கம்)

      தொகுப்பு : அம்பத்தூர் ராமு

;