tamilnadu

img

இந்திய விமானப்  போக்குவரத்துக்கு வான்வழியை திறந்தது பாகிஸ்தான்

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மூடப்பட்ட வான்வழியை, இந்திய பயணிகள் விமான போக்குவரத்துக்கு பாகிஸ்தான் திறந்துள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதத்தில், சிஆர்பிஎப் படையினர் சென்ற பேருந்து மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டியது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டுவீசி அழித்தது. இதில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. 

இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தனது வான்வழியை இந்திய விமானங்கள் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்தது. 

இதனால், இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானமும், அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களும் நீண்ட தூரம் சுற்றி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு அதிக எரிபொருள் செலவு ஏற்படுவதோடு, பயண நேரமும் அதிகரிக்கிறது. இதனால், ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு மட்டும் இதுவரை ரூ.430 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. 

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள இந்திய வான்வெளியில் விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடையை விமானப் படை கடந்த மாதம் நீக்கியது.

இதை அடுத்து, பயணிகள் விமான போக்குவரத்துக்காக கர்தார்பூர்-குருத்வாரா ஆகிய இடங்களுக்கு இடையே வான்வழியை  திறக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தது.  இந்நிலையில், நள்ளிரவு 12.41 மணி அளவில் இந்திய பயணிகள் விமானங்களுக்கு வான்வழியை, பாகிஸ்தான் திறந்துவிட்டுள்ளது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் ஏர் இந்தியாவுக்கு ஏற்பட்டு வந்த பெரும் நிதி இழப்பு தவிர்க்கப்படும். மேலும், பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றி செல்ல வேண்டிய கட்டாயம் விமானங்களுக்கு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


 

;