tamilnadu

img

ஜமாத் உத் அவா தலைவர் ஹபீஸ் சயீத் கைது - பாகிஸ்தான் நடவடிக்கை

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய தீவிரவாதி ஹபீஸ் சயீத் இன்று பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில், மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் அவா தீவிரவாத அமைப்பும், அவரது தொண்டு நிறுவனமான பலாஹ் இ இன்சோனியத்தும் ஐநா உத்தரவுபடி தடை செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா போன்றவை ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பு என்று ஏற்கெனவே பிரகடனம் செய்திருக்கின்றன. இதன் அடிப்படையில், ஹபீஸ் சயீத்தின் இவ்வமைப்புகள் மீது தடை விதிக்கப்பட்டது. இதை அடுத்து, தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை கைது செய்து ஒப்படைக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில், ஹபீஸ் சயீத், லாகூரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

அதில், வழக்கு விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக லாகூரில் இருந்து குர்ஜன்வாலாவுக்கு புறப்பட்டுச் சென்றபோது சயீத்தை கைது செய்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதத்திற்கு எதிராக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக்குழு பாகிஸ்தான் அரசுக்கு கடும் நெருக்கடி அளித்தது குறிப்பிடத்தக்கது.
 

;