tamilnadu

img

சிஏஏக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 6 தீர்மானங்கள் தாக்கல்

ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 6 தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

மத்திய பாஜக அரசு கடந்த டிசம்பர் மாதம் அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கூறி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. மேலும், கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தில், இந்தியாவில் மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் காஷ்மீரில் 370 பிரிவை ரத்து செய்தது ஆகியவற்றுக்கு எதிராக 6 தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 5 அமைப்புகள், இந்த தீர்மானங்களை கொண்டு வந்துள்ளன. அதில், இந்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேச மனித உரிமை குறித்த விதிகளுக்கும், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு இடையே நிறைவேற்றப்பட்ட மனித உரிமை குறித்த ஒப்பந்தத்துக்கும் எதிராக இருப்பதாக தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால், உலக அளவில் அதிக அகதிகள் நிறைந்த நாடாக இந்தியா மாறும் என்றும், இது மிகப்பெரிய மனிதப் பேரிழப்பை ஏற்படுத்தும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசு போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அதற்கு தீர்வு காணாமல், அரசு அதிகாரிகளை கொண்டு போராட்டக்காரர்களை மிரட்டுவதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்திய அரசின் செயல்பாடுகள் தேசியவாதம் என்ற இலக்கை நோக்கி செல்வதாகவும், ஜம்மு-காஷ்மீரில் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டுள்ளதாகவும் தீர்மானத்தில் குறிப்பிட்டிருந்தது.

இந்த தீர்மானம் வரும் புதன் கிழமை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வருகிறது என்றும், வியாழக்கிழமை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், குடியுரிமை சட்டத் திருத்தம் முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், இது குறித்த எந்த விவாதமும், தீர்மானமும் நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 

;