எல்டிஎப்- யுடிஎப் கூட்டாக நடத்திய சத்தியாகிரகத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு
திருவனந்தபுரம், டிச.17- விடுதலைப் போராட்ட இயக்கத்தின் மூலம் உருவான ஜனநாயக மதிப்பீடு களையும் சோசலிஸ்ட் கருத்துகளையும் சமூக நீதிக்கான பார்வைகளையும் ஏற்றுக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசமைப்பு சாசனத்தை தகர்க்க எந்த ஒரு சக்தியையும் அனுமதிக்க முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரத்தில் திங்களன்று எல்டிஎப்- யுடிஎப் நடத்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கூட்டு சத்தி யாக்கிரகத்தை துவக்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது: அந்நிய சக்திகளுக்கு எதிராக தன்னலம் கருதாமல் போராடிய நாடு இது. குஞ்ஞாலி மரைக்காயரும் பழசி ராஜாவும் போராடிய வரலாறு கேரளத்துக்கு சொந்தமா னது. இந்த கேரளத்தில் சிறுபான்மையினரை குடிமக்களாக ஏற்க முடியாது என்று யார் கூறினாலும் அதை அமல்படுத்துவது சாத்தியமல்ல. எந்த ஒரு மனிதரும் விம்பு வது சுதந்திரத்தையே. தேசத்தின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்காக நீண்டகால போராட்டம் நடந்தது. விடுதலைக்காக ஏராள மானோர் தியாகம் செய்தனர். அத்தகைய சுதந்திரத்தை அகற்றும் முயற்சி நடக்கிறது. ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை அமல் படுத்துவதன் பகுதியே இவர்களது நட வடிக்கை. அதற்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்து கிளம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம்களை விலக்கி வைப்பதா?
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கா னிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31க்கு பிறகு வந்த இந்து, புத்த, பார்சி, ஜைன, கிறித்தவ மதங்களை சேர்ந்த வர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்பது புதிய திருத்தத்தின் முக்கிய பரிந்துரை. மட்டுமல்ல, தற்போது 11 ஆண்டுகளுக்கு பதிலாக 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்தி யாவில் குடியிருந்த இந்த பகுதியினருக்கு குடியுரிமை வழங்குவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. முஸ்லிம் மதத்தினரை இதிலிருந்து விலக்கி வைத்திருப்பதுதான் முக்கிய பிரச்சனை. வெளிநாடுகள் என்கிற வரிசையில் ஆப்கானிஸ்தானை உட் படுத்தும்போது இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மியான்மரையும், இலங்கையையும், பூட்டானையும், நேப்பா ளையும் தவிர்த்துவிட்டு தங்களது நிகழ்ச்சி நிரலை அமல்படுத்த முயன்றுள்ளனர். வரலாற்று ரீதியாகவும் நவீன காலத்திலும் இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்வதும் தலையிடுவதும் இலங்கையும் மியான்மரும் பூட்டானும் நேப்பாளமும் ஆகும். இந்நிலையில் இந்த நாடுகளை தவிர்த்துவிட்டு ஆப்கானிஸ்தானத்தை குறிப்பிட்டுள்ளது வரலாற்று ரீதியாகவும், நடைமுறையிலும் ஏற்க முடியாததாகும்.
உச்சநீதிமன்றத்தின் தெளிவு
சாதி, மத, பாலின அடிப்படையிலான எந்த ஒரு பாகுபாட்டையும் அனுமதிக்க முடியாது என பலமுறை உச்சநீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது. அதனால்தான் மதம் மற்றும் தேசத்தின் அடிப்படையிலான இந்த வேற்றுமை அரசமைப்பு சாசனத்துக்கு எதிரா னதுமாகும். அரசமைப்பு சாசனத்தின் அடித் தளத்துக்கு எதிராக அதில் திருத்தம் செய்யும் உரிமை நாடாளுமன்றத்துக்கு இல்லை என கேசவபாரதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. உண்மை நிலை இவ்வாறு இருக்கையில் இப்போது செய்யப்பட்டுள்ள சட்ட திருத்தம் அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானதாகும். குடிமக்களும் அல்லாதவர்களும் என இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் சமவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என அரசமைப்பு சாசனத்தின் 14 ஆவது பிரிவு கூறுகிறது. இதுவும் அரசமைப்பின் அடித்தளமாகும். அரசமைப்பு சாசனத்தின் 13 ஆவது பிரிவின்படி குடியுரிமைக்கு எதிரான எந்த சட்டமும் தவறானதாகும்.
நீண்டகால போராட்டங்களின் விளை வாக பெற்ற விடுதலையின் பயனாக புகழ் பெற்ற அறிவிப்பு வெளியானது. அதன்படி ஏதாவது ஒரு மதத்தின் அடிப்படையிலான நாடாக இந்தியா இருக்காது. மதச்சார்பற்ற நாடாக இருக்கும். அனைத்து மதத்தவ ருக்கும், எந்த மதத்தையும் நம்பாதவருக்கும் வாழ்வதற்கான இடமே மதச்சார்பற்ற இந்தியா. அத்தகைய ஒரு நாட்டில்தான் கடந்த டிசம்பர் 9இல் மக்களவையிலும் 11இல் மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராகத்தான் நாடு முழுவதும் போராட்ட அலைகள் எழுந்து வருகின்றன. அதன் பகுதியாகத்தான் கேரளம் ஒன்றுபட்டுள்ளது என்கிற செய்தி உலகுக்கு அளிக்கப்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் நாம் எப்போதும் ஒன்றுபட்டே நின்றுள்ளோம் என முதல்வர் கூறினார்.
வெளிநாடுவாழ் மலையாளிகள் நலன்
கேரளத்திலிருந்து பல்வேறு பகுதிக ளுக்கு சென்று வாழும், இந்த மண்ணை போற்றி வளர்க்கும் வெளிநாடுவாழ் மலையா ளிகளின் பாதுகாப்பும், சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே கேரளத்தின் நிலைபாடு என்கிற அறிவிப்பாகவும் இந்த கூட்டியக்கம் நடத்தப்படுகிறது. அரசமைப்பு சாசனம் உறுதி செய்துள்ள ‘மதச்சார்பின்மை யின் பின்னணியில் நாம்’ என அனை வரும் ஒன்றுபட்டு ஒற்றை மனிதனாக பிரகட னப்படுத்துவோம் எனவும் முதல்வர் கூறி னார். நூற்றாண்டுகளின் ஊடாக வளர்ந்து வந்தவர்கள் நாம். வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் ‘அரசியல்’ என்கிற கருத்து உருவா னது. மதங்கள், மொழிகள் மற்றும் வெவ் வேறு சாதிகளின் பன்முகத்தன்மை இருந்த போதிலும் பொதுவான கலாச்சார பண்புகள் உள்ளன. அதிலிருந்துதான் நவீன இந்தியா வடிவம் பெற்றது. அதை படைத்தது நாம் ஒன்று என்கிற அறிவு படைத்த மக்கள்தான். ஏராளமான மக்கள் இந்த பாதையில் அணி திரண்டுள்ளனர்.
கலாச்சாரங்களின் சங்கமமே நமது நாடு. ரோமானியர்கள், கிரேக்கர்கள், சீனர்கள், ஆரியர்கள், துரிக்கியர்கள், முகலாயர்கள் என எத்தனை எத்தனை நீரோட்டங்களை சந்தித்து நாம் வளர்ந்து வந்துள்ளோம் என்பதை சிந்திக்க வேண்டும். ஆங்கிலே யர்களின் ஆதிக்கத்தில் சுரண்டல்கள் நடந்த போது அதற்கு எதிரான போராட்டங்கள் வளர்ந்தன. இந்திய தேசிய இயக்கம் வேறு பட்ட கருத்துக்களின் மகா சங்கமமாக இருந்தது. பார்வைகள் வெவ்வேறாக இருந்தாலும் நாட்டின் விடுதலை என்பதே அந்த போராட்டங்களில் பங்கேற்றவர்களின் கனவு. இந்த ஒற்றுமையை வகுப்புவாத அடிப் படையில் பிளவுபடுத்தும் முயற்சி ஆங்கிலே யரால் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த அவர்கள் முயன்றனர். ஆனால் நாம் அதனை எதிர்கொண்டு முறியடித்தோம். அப்படித்தான் நவீன இந்தியாவை மதச்சார் பற்ற ஒன்றாக நம்மால் படைக்க முடிந்தது.
அதிபர் ஆட்சிக்கான முயற்சி
நமது அரசமைப்பு சாசனம் எவ்வாறு வடிவம் பெற்றது என்பது குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. விடுதலை இயக்கத்தில் உருவான ஜனநாயக விழுமியங்களையும் சோசலிச சிந்தனைகளையும் சமூக நீதிக்கான வெளிப் பாடுகளையும் உள்வாங்கி அரசமைப்பு சாசனம் உருவானது. அதனை தகர்க்க அனுமதிக்க முடியாது. மதச்சார்பு நாடாக்க அனுமதிக்க முடியாது என்கிற விடுதலை இயக்கத்தின் வெளிப்பாடுதான் நம்மை ஒருங்கிணைத்த அடித்தளம். அது மொழி, மதம், பாலினம், கலாச்சாரம், பிரதேசம் என்கிற பாகுபாட்டை அனுமதிக்காது. நாடாளு மன்ற ஜனநாயகத்தை மாற்றி அதிபர் ஆட்சி முறையை கொண்டுவர முயற்சிப் பது வேற்றுமையில் ஒற்றுமை என்கிற கருத்தாக்கத்தை சிதைப்பதாகும். அரச மைப்பு சாசனத்தை பாதுகாப்பது என்பதன் வெளிப்பாடுதான் மனிதாபிமானம் கொண் டோரை ஒருங்கிணைத்திருப்பது எனவும் முதல்வர் பேசினார்.
திருவனந்தபுரம் ரத்தசாட்சி மண்டபத்தில் நடந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, சட்ட அமைச்சர் ஏ.கே.பாலன் மற்றும் பல்வேறு சமுதாய தலைவர்கள் பேசினர். அரங்கிற்கு வெளியே பல்லாயிரக்கணக்கான மக்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான முழக்கங்கள் அடங்கிய பதாகைகளுடன் அணிவகுத்தனர். அவர்கள் யாரும் எந்த ஒரு அரசியல் அடையாளத்தையும் கொண்டிருக்கவில்லை.