tamilnadu

img

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் - ஜி.ராமகிருஷ்ணன்

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் சிறுகுறு தொழில் கள் முக்கியமான பங்கினை வகிக்கின்றன. மத்திய அரசின் 2016-17ம் ஆண்டின் புள்ளிவிபரத்தின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறுகுறு தொழில்களின் பங்களிப்பு 30.80 சதவிகிதம். ஏற்றுமதியில் 48.10 சத விகிதம். சிறுகுறு தொழில்கள் மூலம் 11.10 கோடி பேர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான அச்சாணியாக சிறுகுறு தொழில்கள் இருந்து வருகின்றன. ஆனால் அந்த தொழிலில் தற்போது ஏற்பட்டி ருக்கும் நெருக்கடியில் இருந்து விடுபட, நடந்து முடிந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, வழக்கம் போல் கார்ப்பரேட் நிறுவ னங்களுக்கு மட்டுமே சலுகைகள் வாரி வழங்கப்பட்டிருக்கின் றன. குறிப்பாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 35 சதவிகிதத்தில் இருந்து 25.17 சதவிகிதம் குறைக்கப் பட்டிருக்கிறது.

சிறுகுறு தொழில்கள் நெருக்கடியின் பிடியில்...

தமிழகத்தில் மட்டும் 6.70 லட்சம் பதிவு பெற்ற சிறுகுறு தொழிற்கூடங்கள் இருக்கின்றன. இதில் 88355 சிறு தொழில்களாகவும், 2306 நடுத்தர தொழில் நிறுவனங்க ளாகவும் இருந்து வருகின்றன. இதில் ஒரு பகுதி சிறுகுறு தொழில்கள். இந்தத் தொழிற்கூடங்கள் மத்திய அரசின் அடுத்தடுத்த கடும் தாக்குதல்களால் தாக்குப்பிடிக்க முடியாமல்  மூடப்பட்டுவிட்டன.  நடுத்தர தொழில்கள் கடுமை யான நெருக்கடியில் உள்ளன. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியின் எதிரொலியாக ஒட்டு மொத்த பொரு ளாதாரமே சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.   இத்தகைய பின்னணியில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 37வது கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலை மையில் கோவாவில் நடைபெற்றது.  தொழில் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவிற்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முக்கியமான காரணம் என்று பல பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக் காட்டிய பிறகும் நலிவடைந்து வரும் தொழில்களை குறிப்பாக சிறு, குறு தொழில்களை தூக்கி நிறுத்திட, வரியை குறைத்திட ஜி.எஸ்.டி. கவுன்சில் மறுத்துவிட்டது. 

காப்பீட்டு வரி குறைப்பு இல்லை

மேலும், காப்பீட்டுத்துறை உள்ளிட்ட சேவைத் துறையிலும் வரியைக் குறைக்கவில்லை. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சேமிப்பிற்காக, எதிர்கால குடும்ப பாதுகாப்பிற்காக காப்பீடு செய்து வருகிறார்கள்.  இதற்கும்  18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப் படுகிறது.  இவ்வரியை குறைக்க வேண்டுமென்ற வலுவான கோரிக்கை வந்தபோதும் கவுன்சில் வரியை குறைக்க வில்லை.  சமூக நோக்கோடு சாதாரண மக்களையும் நெருங்குகிற எல்.ஐ.சி.யின் பிரிமியங்கள் மீது ஜி.எஸ்.டி. வரி விதிப்பது சாதா ரண மக்களின் மீது, அவர்களின் இன்சூரன்ஸ் விழைவின் மீது பாதிப்பை ஏற்படுத்துவதே ஆகும். இந்தியாவில் பெரும் பகுதி உழைப்பாளி மக்கள் காண்ட்ராக்ட்/கேசுவல் முறைமை யிலான அமைப்புசாரா தொழிலாளர்களாக, சமூக பாதுகாப்பு அற்றவர்களாக உள்ள நிலையில் எல்.ஐ.சி. தருகிற சமூகப் பாதுகாப்பின் மீதும் சுமை ஏற்றுவது நியாயமல்ல.  ஆயுள் மற்றும் உடல்நலகாப்பீடு மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்வதன் மூலம் பாலிசிதாரர் நலன், இன் சூரன்ஸ் பரவல், அரசின் திட்டங்களுக்கான நிதி ஆதாரங்கள் ஆகியவற்றை பாதுகாக்க இயலும்.

பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரித் திட்டத்தினால் தமிழகத்தில் ஐம்பதாயிரம் சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டு 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர் என கடந்த ஆண்டு துவக்கத்தில் தமிழக சட்டமன்றத்தில் மாநில அமைச்சர் ஒப்புக்கொண்டார். இந்த ஓராண்டில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. 

அமைச்சர் கூற்று ஏற்கத்தக்கதல்ல

கோவாவில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில அமைச்சர் “தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது” என கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. உதாரணமாக, கோவை மாவட்டத்தில் இன்ஜினீயரிங் தொழில்களில் உதிரி பாகங்கள் கொள்முதலுக்கு 18 சதவீதமும் விற்பனைக்கு 12 சதவீதமும்  ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி.க்கு முந்தைய வரி விதிப்பு முறையில் உதிரிபாகங்கள் கொள்முதல் மற்றும்  விற்பனை இரண்டுக்கும் 5 சதவீதமாக (மதிப்பு கூட்டு வரி - வாட்) இருந்தது.  முன்பு இருந்தது போன்று 5 சதவீதமாக வரியை குறைக்க  வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள்.  ஜாப் வொர்க்குக்கு ஜி.எஸ்.டி.க்கு முன்பு வரியில்லை. முன்பு இருந்ததைப்போல் ஜாப் வொர்க்குக்கு வரி கூடவே கூடாது எனவும் கோரிக்கை எழுந்தது.ஆனால், ஜி.எஸ்.டி. கவுன்சில் சிறு, குறு தொழில் முனைவோரின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. 

ஜாப் ஒர்க் - குடிசைத் தொழில் போன்றது

ஜாப் வொர்க்குக்கு ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.  ஜாப் வொர்க் என்பது ஒரு குடிசைத் தொழிலைப் போன்றது. நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து வேலை செய்யக் கூடிய  30,000 சிறு, குறு லேத் பட்டறைகள் கோவை மாவட்டத்தில் உள்ளன.  இம்மாவட்டத் தில் கணினிமயமான லேத்களும் உள்ளன.  இந்த நிறு வனங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் பேர் வேலை செய்கின்றனர். ஜாப் வொர்க் என்பது எந்த பொருளையும் வாங்குவதும் இல்லை, உற்பத்தி செய்வதும் இல்லை.  சில வேலைகளை முடித்துக் கொடுப்பது தான். இந்நிலையில் ஜாப் வொர்க்குகளுக்கு 12 சதமானம் வரி விதிப்பது என்பது மூடப்பட்ட அல்லது நலிந்து வரக்கூடிய லேத் பட்டறை தொழில்களை பாதுகாக்க உதவிடாது. 

பம்ப் மற்றும் கிரைண்டர் தொழில்

கோவை மாவட்டத்தில் உள்ள 3000  பம்ப் நிறுவனங்க ளும் மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கி உள்ளன.  இவைகளில் மூன்றில் ஒரு பகுதி பம்ப் நிறுவனங்கள் கடந்த இரண்டாண்டுக ளில் மூடப்பட்டுவிட்டன.  ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதற்கு முன்பாக உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் (இன்புட் காஸ்ட்), பம்ப் விற்பனைக்கும் தலா 5 சதவீத வரிதான் விதிக்கப்பட்டது.  மேலும், ஆண்டொன்றுக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் பெறுமான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வரி விதிப்பு இல்லை.  தற்போது பம்ப் உற்பத்தி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு இருப்பதால் சிறு, குறு நிறுவனங்கள் நலிவடைந்து வருகின்றன. வெட் கிரைண்டர் உற்பத்தியில் உதிரி பாகங்கள் கொள்முத லுக்கு 18 சதவீதமும் விற்பனைக்கு 12 சதவீதமும் ஜி.எஸ்.டி.  வரி இருந்தது. தற்போது விற்பனைக்கு 5 சதவீதமாக குறைத்தி ருக்கிறார்கள். இதைத் தான் ‘வரி குறைப்பு’ என மாநில அமைச்சர் கூறுகிறார்.  கொள்முதலுக்கு 18 சதவீதம் வரி செலுத்திவிட்டு உற்பத்தி பொருள் விற்பனையில் 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி என்றால், வெட் கிரைண்டர் உற்பத்தியாளர்க ளுக்கு நட்டம் ஏற்படாதா? கோவை மாவட்டத்தில் சுமார் 200 சிறு, குறு கிரைண்டர் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.  ஜி.எஸ்.டி. வரிக்கு முன்பு இருந்ததைப் போல் 5 சதவீதமாக குறைக்கப்படாததால் இந் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  கிரைண்டர் நிறுவனங்கள் மட்டுமல்ல, ஜி.எஸ்.டி. வரி குறைத்தால் தான் இவைகளுக்கு உதிரி பாகங்கள் தயார் செய்யும் ஆயிரத்திற் கும் மேற்பட்ட நிறுவனங்களையும் பாதுகாக்க முடியும்.

அமுக்கப்பட்ட தொகை 60 ஆயிரம் கோடி எங்கே?

உற்பத்திக்கும், விற்பனைக்கும் இடையிலான 13 சதவீத தொகையினை உற்பத்தியாளர்களுக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் திரும்ப செலுத்தும் என ஜி.எஸ்.டி. சட்டம் சொல்லுகிறது.  ஆனால், இதுவரையில் பெரும்பான்மையான உற்பத்தி யாளர்களுக்கு இத்தகைய திரும்ப செலுத்தும் பட்டுவாடா நடக்கவில்லை. இன்ஜினியரிங் தொழில்களுக்கு மட்டுமல்ல,  ஒட்டு மொத்தமாக இன்வர்டர் டூட்டி ஸ்டிரக்சர் அடிப்படையில் உற்பத்தியாளர்களுக்கு ஜி.எஸ்.டி. பணப்பட்டுவாடா செய் யப்படவில்லை. ஓராண்டுக்கு முன்னதாக உற்பத்தியா ளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படாமல் நிலுவையில் உள்ள தொகை ரூ.60,000 கோடி என ஒரு நாளேடு தனது தலையங்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளது. தற்போது, இத்தொகை இரண்டு மடங்காக அதிகரித்திருக்கக்கூடும். 

வார்ப்படத் தொழில்கள்

கோவை மாவட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட சிறு, குறு வார்ப்பட நிறுவனங்கள் உள்ளன. ஜி.எஸ்.டி. சட்டத்திற்கு முன்பு ரூ.1.5 கோடி வரை வருமானம் உள்ள கம்பெனிகளுக்கு கலால்வரி இல்லை. வேலை முடித்து விற்பனை செய்தால் வாட் வரி 5 சதவீதம் செலுத்த வேண்டும். தற்போது ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதம் செலுத்துவதால் வார்ப்பட தொழில்களும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.  பம்ப் நிறுவனங்கள், லேத் பட்டறைகள் போன்ற சிறு, குறு தொழில்கள் நலிவடைந்து ஒரு பகுதி தொழில்கள் மூடப் பட்டுள்ளதால் இத்தகைய தொழில் முனைவோர் குடும்பங்க ளின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. 

தொழில் முனைவோர் கூலியாளாக மாறுவதுதான் வளர்ச்சியா?

பம்ப் நிறுவனத்தை நடத்த முடியாமல், மூடிவிட்ட ஒரு  சிறு உற்பத்தியாளரை சந்தித்தேன்.  பண மதிப்பு நீக்க நட வடிக்கையில் தான் நடத்திய பம்ப் நிறுவனம் பாதிப்புக் குள்ளானது என்றும்,  ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு தொழிலை நடத்த முடியாமல் மூடிவிட்டதாகவும் வேதனை யோடு கூறினார். அவருக்கு 11வது மற்றும் 9வது படிக்கக் கூடிய இரண்டு பெண் குழந்தைகளும், மனைவியும் உள்ள னர்.  குடும்பத்தை பாதுகாக்க ஒரு டாஸ்மாக் கடைக்கு அருகில் சாலை ஓர அசைவ உணவுக் கடை வைத்து குடும்பத்தை நடத்தி வருவதாக கூறியவர் தன்னுடைய பெயரை குறிப்பிட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.  நினைத்துப் பார்க்கவே முடியாத, வேதனை தருகிற இது போன்ற காட்சிகள் அன்றாடம் அரங்கேறி வருகின்றன.இது போன்று கோவை மாவட்டத்தில் மூன்றில் ஒரு பகுதி சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. இந்த தொழில் முனைவோர்கள் எல்லாம் தங்களுடைய நிறுவனங்களை மூடிவிட்டு கூலி வேலைக்கு செல்கிறார்கள்.  கூலி வேலை கூட தொடர்ச்சியாக கிடைக்கவில்லை என்று தங்களது வேதனையை வெளிப் படுத்துகிறார்கள். 

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் - ஜி.ராமகிருஷ்ணன்,அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) 
 

 

;