tamilnadu

img

‘சொர்க்கலோகத்தில்’ நெருப்பு : மக்களின் கோபமிக்க எதிர் வினைகள் ஒடுக்குமுறைக்கு எதிரானதா?

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ப்ளாயிட் என்பவர் காவல்துறையால் வன்கொலைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதற்கு எதிரான மக்களின் கோபமிக்க எதிர் வினைகள் ஒடுக்குமுறைக்கு எதிரானதா? அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் பாசிசப் போக்குக்கு எதிரானதா?  முதலாளித்துவத்திற்கு எதிரானதா?

\ஏ.கே.பத்மநாபன் : அமெரிக்காவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய நிகழ்வுகளை எழுச்சி என்று, கலவரம் என்று, வன்முறை என்று பல வகையில் பல ஊடகங்களின் தலைப்புகள் சொல்லுகின்றன. ஆனால் அங்கு வந்திருப்பது ஒரு மிகப் பெரிய வெடிப்பு. அது ஒடுக்குமுறைக்கு எதிரானதா? டிரம்ப் அரசின் பாசிசப் போக்குக்கு எதிரானதா?  முதலாளித்துவத்திற்கு எதிரானதா என்று கேள்வி கேட்டால், இந்த மூன்று அம்சங்களையும்  உள்ளடக்கிய அமெரிக்க அமைப்புமுறைக்கு எதிராக வெளிப்பட்டிருக்க  கூடிய ஒரு எழுச்சி என்று சொல்லுவேன். 

காரணம், அமெரிக்காவினுடைய அமைப்பு முறைமை என்பது பாரபட்சத்தன்மை கொண்டது, ஏற்றத்தாழ்வானது, அதை சொர்க்கலோகமாக சித்தரிப்பவர்கள் ஒருபக்கம் இருக்க, அதனுடைய உண்மை உருவம் மிகவும் அம்பலப்பட்டு நிற்கக் கூடிய ஒரு காலத்தில் ஜார்ஜ் ப்ளாயிட், 46 வயது ஒரு கறுப்பினக் குடிமகன், மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். ஒரு போலீஸ் அதிகாரி அவருடைய கழுத்துக்கு மேல் அவரது முட்டியை அழுத்தி அவருடைய உயிரைப் பறித்திருக்கக் கூடிய கொடுமை உலகையே அதிர வைத்துள்ளது. மூன்று பேர் அதற்குத் துணையாக, நான்கு காவல்துறையைச் சார்ந்தவர்கள் பகிரங்கமாக ஒரு தெருவில் பலர் பார்த்துக் கொண்டிருக்க நடத்தியுள்ள கொடுமை அது. இந்த வீடியோ வெளிவந்த சூழலில் அதற்கு எதிராக ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை காண்கிறோம். 

இது நடைபெற்றது மே 25ம் தேதி. அந்த விவரங்கள் வெளியே வர வர, அதையொட்டி எழுந்துள்ள கோபம், எதிர்ப்பு,  கொந்தளிப்பு,  இவை அனைத்தும் அமெரிக்காவினுடைய பிரதான நகரங்களை இன்று மிகப்பெரிய  வன்முறைக் களமாக மாற்றியிருக்கிறது. இது எதைக் காட்டுகிறது?

அமெரிக்க அமைப்பு முறைமையின் அடிப்படைத்தன்மைகளான ஏற்றத்தாழ்வு, வறுமை, வேலையின்மை, அதற்கெல்லாம் மேலாக இருக்கக் கூடிய நிறவெறி ஆகியவற்றுக்கு எதிராக தேங்கியிருந்த கோபத்தின் வெளிப்பாடுகளே ஆகும். 
ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்கப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிறப்பை பற்றிப் பேசுவார்கள், ஆப்ரகாம் லிங்கன் அடிமைத் தனத்தை ஒழித்ததைப் பற்றிப் பேசுவார்கள். அல்லது நம் காலத்தில் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியானார் என்று பேசுவார்கள். ஆனால், நான் அமெரிக்க பழைய வரலாறுகளுக்கு அதிகமாகச் செல்லவில்லை. ஆனால் அமெரிக்க வரலாற்றில் கறுப்பின மக்களுக்கு எதிராக அல்லது லேட்டினோக்களுக்கு எதிராக அல்லது, சுருங்கச் சொன்னால், வெள்ளையர் அல்லாதவர்களுக்கு எதிராக உள்ள  அடிப்படையான அணுகுமுறை அன்று இருந்தது இன்றும் நீடிக்கிறது.

ஆகவே தான் மார்டின் லூதர் கிங்கினுடைய உலகமே புகழ்ந்த  “எனக்கொரு கனவிருக்கிறது” என்ற அந்த உரை இருக்கிறதே, அந்த கனவு இன்றும் கனவாகவே இருக்கிறது. மூன்று நிமிட வீடியோவைப் பார்த்தேன். ஒரு பெண் ஆக்ரோஷமாக போலீஸ் அதிகாரியிடம் சொல்லுகிறார், ‘நான் கொல்லப்பட்டாலும் என்னுடைய குழந்தைகளாவது வீதியில் சுதந்திரமாக நடக்கட்டும்.’ இது எங்கே நடக்கிறது?  உலகத்தினுடைய மிகப் பெரிய ஜனநாயகமென்று தம்பட்டம் அடிக்கக்கூடிய, டமாரம் அடிக்கக் கூடிய, உலக ஊடகங்கள் எல்லாம் புகழ் பேசக் கூடிய ஒரு தேசத்தில் நடக்கிறது. இது ஒற்றைச் சம்பவமாக இருந்தால் இது எந்த சமூகத்திலும் நடக்கலாம் என்று சொல்ல முடியும். ஆனால் அமெரிக்க வரலாற்றில் தொடர்ச்சியாக இது நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது என்பது தான் இன்று மின்னபோலிஸில் நடந்துள்ள அந்த சம்பவம்.

மின்னபொலிஸ் மாநகரின் மேயர்  சொன்ன வார்த்தைகள் உலகத் தொழிற்சங்க சம்மேளனம் அனுப்பியிருக்கக்கூடிய ஒரு செய்தியில் இடம் பெற்றுள்ளது. அதில் ஒரு வார்த்தை இருக்கிறது, “இதுபோன்றதொரு சம்பவத்தில் நாங்கள் ஈடுபட்டிருந்தால்  இந்நேரம் சிறையில்தான் இருந்திருப்போம், ஜார்ஜ் ப்ளாயிட்டைக் கொலை செய்தவர்கள் இன்னும் ஏன் சிறையில் இல்லை” என்று அந்த மேயர் கேள்வி எழுப்புகிறார்.  இதுதான் அமெரிக்காவின் கறுப்பின மக்கள் நிலைமை.ஜார்ஜ் ப்ளாயிட்டுக்காக வாதாடக் கூடிய வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த ஒரு அம்மையார் பேசுகிற போது, இன்று பெருந்தொற்று உலகத்தை பாதித்திருக்கிறது. ஆனால், அமெரிக்காவில் இருக்கக்கூடிய கறுப்பின மக்களோ இன்றைக்கு கோவிட் பெருந்தொற்றோடு போலீஸ் இனவெறி, நிற வெறி, போலீஸ் அடக்குமுறை, சிறைக் கொடுமைகள் ஆகிய பெரும் தொற்றுகளையும் ஒரு சேர எதிர்கொள்கிறார்கள் என்கிறார்.

ஆகவே ஒட்டுமொத்தமாக, இது எந்த நேரத்தில் நடக்கிறது? அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கோவிட் பெருந்தொற்றால் உயிரிழந்திருக்கக்கூடிய சூழலில் நடக்கிறது. அந்த பெரும் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுள் மிக மிகப் பெரும்பான்மையானவர்கள் கறுப்பின மக்களும் அல்லது வெள்ளையரல்லாதவர்களுமாக இருக்கிறார்கள். சமூகத்தின் அடித்தட்டு மக்களாக இருக்கக் கூடியவர்களுக்கு எவ்விதமான பாதுகாப்பும் மருத்துவ வசதியும் இல்லை. அவர்களுடைய பிணங்களுக்குக் கூட குறைந்தபட்ச மரியாதை இல்லை என்கிற செய்தி  சொர்க்கபுரியான  அமெரிக்காவிலிருந்து வெளிவருகிறது. இக் காலத்தில்தான் ஜார்ஜ் ப்ளாயிட் கொல்லப்படுகிறார்.ஆகவே, இது ஒட்டுமொத்தமாக உள்ள முதலாளித்துவ அமைப்பு முறைமையினுடைய விளைவுகளால் தாங்கமுடியாத துயரத்திற்கும், இன்னல்களுக்கும், பாரபட்சத்திற்கும், வறுமைக்கும், வேலையின்மைக்கும் உள்ளாகி இருக்கக்கூடிய மக்களுடைய எழுச்சியே!

இது அமெரிக்க ஜனாதிபதியின் பாசிசத் தன்மைக்கும் எதிரானதா என்று கேட்டால், ஜனாதிபதியின் எதேச்சதிகாரம் என்பது அது அமெரிக்காவுடைய அடிப்படையான அணுகுமுறை சம்பந்தப்பட்டது.  உலகமெங்கும் போர்க் மூட்டி போர்க் கருவிகளையும், ஆயுத வியாபாரத்தையும் செய்து லாபத்தைப் பெருக்குகிற நாடு அது.  உலக அமைதியைப் பற்றிய கவலை அதற்கு இல்லை. உலக மக்கள்  பற்றிய கவலையுமில்லை. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் தன்னுடைய சொந்த மக்களைப் பற்றியே கவலையில்லாத ஆளும் வர்க்கம்தான் ஆட்சியில் இருக்கிறதென்ற   உண்மையை இது வெளிக் கொணர்ந்துள்ளது.  மக்களுக்கு முன்னால் இன்றைக்கு  அம்பலமாகி நிற்கிறது அமெரிக்க அமைப்பு முறைமை. வன்முறை என்பது இன்றைக்கு ஏன் அமெரிக்க நகரங்களில் நடக்கிறது? ஏன் கறுப்பின மக்கள் ஆத்திரப் படுகிறார்கள்?   ஒடுக்குமுறைக்கு எதிரான, பாரபட்சத்திற்கு எதிரான, அசமத்துவத்திற்கு எதிரான, வன்முறைகளுக்கு எதிரான, காவல்துறையின் அராஜகத்திற்கு எதிரான, ஜனநாயக விரோத தன்மைக்கு எதிரான மக்களுடைய எழுச்சியாக இது இருக்கிறது. காலங்காலமாய் அவர்கள் மனதில் இருந்த கோபத்தின்    கொந்தளிப்பு இது.  மேற்கூறிய  அத்தனை கேடுகளும் முதலாளித்துவத்தினுடைய அடிப்படையான தன்மை. ஏற்றத்தாழ்வு, சுரண்டல், லாபவெறி, பாரபட்சம், ஒடுக்குமுறை ஆகியனதான் முதலாளித்துவத்தின் இலக்கணமாகத் திகழ்பவை. 

நான் பார்த்த காணொலியில் “என் குழந்தைகளாவது வீதிகளில் சுதந்திரமாக நடக்கட்டும்” என்று சொல்லக் கூடிய அந்த இளம் பெண்ணின் கண்ணீர், கோபம் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான கோபாவேசமாக மாறட்டும்.

===ஏ.கே.பத்மநாபன், சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர்===

தொகுப்பு  : செ. முத்துக்குமாரசாமி, நா. சுரேஷ்குமார்

;