1572 - ஃப்ரான்சில் கிறித்துவத்தின் பிரிவுகளிடையே நடைபெற்ற சமயப் போர்களின் ஒரு பகுதியான புனித பார்த்தலேமு நாள் படுகொலைகளில் பாரிசில் மட்டும் சுமார் 3,000 பேரும், தொடர்ந்து ஃப்ரான்ஸ் முழுவதும் சுமார் 70,000 பேரும் கொல்லப்பட்டனர். சமயப் போர்களின் தொடக்கமாகக் குறிப்பிடப்படும் 1562இல் வாசி என்ற இடத்தில் நடைபெற்ற படுகொலைகள் இத்தொடரில் 2019 மார்ச் 1இல் இடம்பெற்றுள்ளன. 1598வரை நடைபெற்ற இந்த சமய மோதல்களில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஐரோப்பிய வரலாற்றில் 80 லட்சம் பேர் பலியான முப்பதாண்டுப் போருக்கு அடுத்து, மிக அதிக உயிர்ப்பலி ஏற்பட்ட நிகழ்வாக இந்த சமயப் போர்கள் குறிப்பிடப்படுகின்றன.
போப்பைத் தலைவராகக் கொண்ட கத்தோலிக்கத் திருச்சபையில் நிலவிய ஊழல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளில், ஜான் கால்வினின் போதனைகளைப் பின்பற்றியவர்கள் ஹ்யூகநாட்(ஃப்ரான்சின் ப்ராட்டஸ்ட்டண்ட்) என்று அழைக்கப்பட்டனர். ஃப்ரான்சின் ஒன்பதாம் சார்லஸ் அரசர், ஹ்யூகநாட்களுடன் இணக்கமாக இருந்தார். ஹ்யூகநாட்டான முக்கிய தளபதி காஸ்பர்ட்-டி-கொலிஞி அரசரிடம் அதிக செல்வாக்குப் பெறுவதை, அரசரின் தாயார் கேத்தரின்-டி-மெடிசி விரும்பவில்லை. அரசரின் சகோதரரி மார்கரெட்டுக்கும், நவாரே பகுதியின் சிற்றரசரான, ப்ராட்டஸ்ட்டண்ட் பிரிவைச் சேர்ந்த மூன்றாம் ஹென்றிக்கும், 1572 ஆகஸ்ட் 18 நடைபெற்ற திருமணத்திற்காக, ஏராளமான ஹ்யூகநாட் தலைவர்கள் பாரிசுக்கு வந்திருந்தனர்.
திருமணம் முடிந்த 4 நாட்களில், நடைபெற்ற ஒரு கொலை முயற்சியிலிருந்து கொலிஞி காயத்துடன் தப்பித்தார். ஏராளமான ஹ்யூகநாட்கள் பாரிசில் குவிந்திருந்த நிலையில், இந்தக் கொலைமுயற்சிக்கு பதில் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், அதனால் அவ்வாறு நடப்பதற்குமுன் அவர்களைக் கொல்லவேண்டும் என்றும் அரசரை ஏற்கச்செய்தவர், கேத்தரின்-டி-மெடிசி(அரசரின் தாயார்) என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஹ்யூகநாட்கள் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதைத் தடுக்க, அவர்களைக் கொல்லுமாறு அரசர் உத்தரவிட்டார். ஆகஸ்ட் 24 அதிகாலையில் உறங்கிக் கொண்டிருந்த கொலிஞி படுகொலை செய்யப்பட்டதுடன், சுமார் 3,000 ஹ்யூகநாட்கள் ராணுவத்தாலும், கத்தோலிக்க மதவாதிகளாலும் கொல்லப் பட்டனர். தொடர்ந்து ஃப்ரான்ஸ் முழுவதும் பரவி, சுமார் 70,000 பேர் பலியான இந்நிகழ்வு, அந்த நூற்றாண்டின் மிக மோசமான சமயப் படுகொலையாகக் குறிப்பிடப்படுகிறது. - அறிவுக்கடல்