1806 பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியனிடம், பேரரசர் இரண்டாம் பிரான்ஸ் தோல்வி யுற்றதையடுத்து ஏற்பட்ட ப்ரஸ்பர்க் அமைதி உடன்பாட்டின்படி புனித ரோமப் பேரரசு அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டு முடிவுக்கு வந்தது. தற்போதைய ரோம் நகரம் இருக்குமிடத்தில் பதினான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மனிதர்கள் வசித்ததாக தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கி.மு.753இல், இத்தாலியின் டைபர் நதிக்கரையில், ரோமுலஸ், ரீமஸ் என்னும் இரட்டைச் சகோதரர்களால் ரோம் நகர் உருவாக்கப்பட்டதாகப் புராணக் கதைகள் கூறுகின்றன. இவர்கள், கிரேக்க-ரோம புராணங்களின்படி, ஈனியாஸ் என்னும் ட்ரோஜான் இளவரசனின் வழிவந்தவர்கள். ரோம் என்ற பெயருக்கான தெளிவான வரலாறு தெரியவில்லை. கிரேக்க மொழியில் ரோம் என்றால் வலிமை என்று பொருள். இத்தாலியில் வசித்த இட்ரஸ்கன் நாகரிக மக்களின் மொழியில் நதி என்ற பொருளுடைய ரூமோன் என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கி.மு.509இல் ஏற்பட்ட ஓர் அரசியல் புரட்சிக்குப்பின் ரோம் குடியரசானது.
நகர அரசு என்பதிலிருந்து மத்தியதரைக்கடல் பகுதி முழுவதற்கும் விரிவடைந்த இது, கி.மு.27இல் அகஸ்டஸ் சீசரைப் பேரரசராகக்கொண்டு, ரோமப் பேரரசாகியது. ட்ராஜான் என்ற பேரரசரின் (கி.பி.98-117)காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்த ரோமப்பேரரசு, 395இல் கிரேக்கம் பேசும் கிழக்கு ரோமப்பேரரசாகவும், லத்தீன் பேசும் மேற்கு ரோமப்பேரரசாகவும் பிளவுற்றது. கிழக்கு ரோமப்பேரரசு, ஒட்டோமான்கள் 1453இல் கைப்பற்றும்வரை பைசாந்தியப் பேரரசாகத் தொடர்ந்தா லும், மேற்கு ரோமப்பேரரசு 476இலேயே முடிவுக்குவந்து விட்டது. இதனை, அரசர் சார்லமேன் என்பவரைப் பேரரசராக்கி, திருத்தந்தை மூன்றாம் லியோ புதுப்பித்தார். 900களின் தொடக்கத்தில் இத்தாலிய அரசர்கள் இதைக் கைப்பற்றியதால், மீண்டும் முதலாம் ஓட்டோ பேரரசர் கைப்பற்றிய 962ஐ இதன் தொடக்கமாகச் சிலர் குறிப்பிடு கிறார்கள். தொடக்கத்தில் ரோமப் பேரரசு என்றே அழைக்கப்பட்ட இது 1157இலிருந்து புனிதப் பேரரசு என்றும், 1254இலிருந்து புனித ரோமப் பேரரசு என்றும் அழைக்கப்பட்டது. ‘இது எந்த வகையிலும் புனிதமானது மில்லை, ரோமானியர்களுடையதுமில்லை, பேரரசுமில்லை’ என்று வால்ட்டேர் கூறியது புகழ்பெற்றது. 1805இன் பிற்பகுதி யில் நெப்போலியனிடம் அடுத்தடுத்துத் தோல்வியுற்ற நிலையில், டிசம்பர் 6இல் ப்ரஸ்பர்க் (தற்போது ஸ்லோவேக்கியா-வின் தலைநகராகவுள்ள ப்ராட்டிஸ்லாவா) நகரில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டின்படி, 1806 ஆகஸ்ட் 6இல் இப்பேரரசு முடிவுக்கு வந்தது.