tamilnadu

img

பாலியல் தொல்லை தொடர்பாக ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை கைது  

அரியலூர் அருகே அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியையும் போலீசார் கைது செய்தனர்.  

அரியலூர் அருகே உள்ள காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றுபவர் தமிழாசிரியர் அருள் செல்வன் வயது (35). இவர் அப்பள்ளியில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல மாணவிகளிடமும், பயிற்சி ஆசிரியைகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆசிரியரின் தவறான நடத்தைக் குறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் ஆசிரியர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சம்பந்தப்பட்ட பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். மேலும் தமிழாசிரியர் அருள்செல்வன் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  

இச்சம்பவம் அறிந்து தகவலறிந்து பள்ளிக்கு வந்த அரியலூர் காவல்துறையினர், தமிழாசிரியர் அருள்செல்வனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதனை தொடர்ந்து அருள்செல்வன் மீது புகார் தெரிவித்த போது நடவடிக்கை எடுக்காமல் இருந்த தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியையும் அரியலூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த விவகாரம் குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று மாணவ-மாணவிகளையும், பெற்றோரையும் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி எச்சரித்தாக கூறப்படுவதால், குற்றத்திற்கு துணைபோன குற்றச்சாட்டில் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;