tamilnadu

img

மூன்றாம் பாலினத்தவர்கள் அமெரிக்க ராணுவத்தில் சேர தடை உத்தரவு அமலுக்கு வந்தது

அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர தடை விதிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

கடந்த 2016-ஆம் ஆண்டில், பாலியல் பாகுபாடின்றி அனைவரும் சரிசமமான வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களும் சேர்ந்து பணியாற்றலாம் என்ற புதிய உத்தரவை முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிறப்பித்தார். இதனை பல்வேறு தரப்பினரின் வரவேற்றனர்.

இதை அடுத்து, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம், சரியான நிலைப்பாடு எடுக்க முடியாமல் தடுமாற்றத்துடன் உடல்ரீதியாக மாற்றம் அடையாதவர்கள் பணிகளில் சேர்ந்த பிறகு விடுமுறை எடுத்துக்கொண்டு அறுவை சிகிச்சைக்கு செல்வதால் ஆள்பற்றாக்குறையும், அரசுக்கு அதிகமான செலவினமும் ஏற்படுவதாக கூறி தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர தடை விதிக்க தீர்மானித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க சிவில் லிபர்டிஸ் யூனியனால் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மூன்றாம் பாலினத்தவர் அமெரிக்க ராணுவத்தில் சேருவதற்கான தடை அரசியலமைப்பின் சமமான பாதுகாப்பு விதிகளை மீறியது என்று அந்த தடையை ரத்து செய்தனர்.

 இதனை அடுத்து, மூன்றாம் பாலினத்தவர்களாக மாறுவதற்கான அறுவை சிகிச்சைகள் முடிந்து முழுமையாக ஆணாகவோ, பெண்ணாகவோ மாறிவிட்டவர்கள் மட்டுமே இனி முப்படைகளின் பணிக்காக விண்ணப்பிக்க முடியும். ராணுவத்தில் சேருவதற்காக உளவியல் மற்றும் உடல் கூறியல்களை கண்டறிய அமைக்கப்பட்டுள்ள குழுவினரின் பரிந்துரைக்கு பின்னர் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் கடந்த மாதம் சில கொள்கை முடிவுகளை மாற்றினார்.

இந்நிலையில், இந்த உத்தரவு நேற்று முதல் நடைமுறைக்கு வந்ததாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்ட்டகன் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் முப்படைகளில் பணியாற்றும் சுமார் 13 லட்சம் பேரில் மூன்றாம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை தற்போது சுமார் 9 ஆயிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


;