அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் வெள்ளையின காவலரால் முட்டியால் 8 நிமிடங்கள் 46 நொடிகள் அழுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்துப்பகுதி மற்றும் முதுகுப்புறம் அழுத்தப்பட்டதால் ஏற்பட்ட மூச்சு திணறலால் உயிரிழந்தார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பிளாய்ட்டின் மரணத்திற்கு நீதிகேட்டு அமெரிக்காவின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. காவல்துறையினர் போராட்டக்காரர்களை ஒடுக்க பல பகுதிகளில் கண்ணீர் புகை குண்டு வீசியதோடு துப்பாக்கி சூடும் நடத்தி உள்ளனர். காவல்துறையினரின் அடக்கு முறை காரணமாக கலவரம் மூண்டது. கடைகள், வாகனங்கள், கட்டிடங்கள், பல தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப் போராட்டங்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் ராணுவத்தை இறக்கி விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இது ஆதிக்கம் செலுத்த வேண்டிய நேரம் என்று எதேச்சதிகார போக்கில் பேசி உள்ளார்.
ட்ரம்பின் இந்த பேச்சுக்கு உயர் காவல் அதிகாரி ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார். சிஎன்என் தொலைக்காட்சிக்கு பேசிய காவல் அதிகாரி ஹோஸ்டன் அதிபரால் ஆக்கப்பூர்வ மாக ஏதும் செய்ய முடியவில்லை என்றால் வாயை மூடிக்கொண்டு இருங்கள். 20க்கும் வயதுக்குட்பட்ட ஆண்களையும் பெண்களையும் இளம் வயதினரையும் நாம் சிக்கலில் சிக்க வைத்துள்ளாம். இது ஆதிக்கம் செலுத்த நேரம் இல்லை. மக்களின் மனங்களை வென்றெடுக்கும் நேரம். பலர் வீடு உடைமைகளை இழந்துள்ளனர். இந்த நேரத்தில் பலத்தை காட்டுவது நல்ல தலைமைக்கு அழகல்ல நமக்கு இப்போது தேவை நல்ல தலைமை இது ஹாலிவுட் அல்ல இது நிஜவாழ்க்கை என தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க மக்கள் அமைதிகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.வெறுப்பை அடக்கும் வழி அன்புதான் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.