வாஷிங்டன், ஆக.9- காஷ்மீர் பிரச்சனை இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இருதரப்புப் பிரச்சனை என்ற தங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. காஷ்மீர் பிரச்சனையில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் உதவத் தயார் என அமெரிக்க ஜனாதிபதி என ஏற்கனவே தெரிவித்த நிலையில், அது இரு தரப்புப் பிரச்சனை என்றும், காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தா னுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்ட்டகஸிடம் காஷ்மீர் தொடர்பான அமெரிக்க நிலைப் பாட்டில் மாற்றம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.அப்போது மாற்றம் இல்லை என்று தெரிவித்த அவர், காஷ்மீர் பிரச்சினைக்கு மூன்றாவது நபர் மத்தியஸ்தம் இன்றி இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வு காண வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என்றார். இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.