திஸ்பூர்:
அசாம் மாநிலம் காகஜ் நகரில் இயங்கி வந்த நிறுவனம் நாகான் காகித ஆலையாகும். மத்திய அரசின் இந்துஸ்தான் காகிதக் கழகத்திற்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமாகும். இந்த ஆலை மூடப்பட்டதால், இங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு கடந்த 27 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், காகித ஆலையில் பணியாற்றி வந்த பிஸ்வஜித் மஜூம்தார் என்ற மெக்கானிக்கல் இன்ஜியனியர், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மஜூம்தாருக்கு 27 மாதங்களாக ஊதியம் கிடைக்காத நிலையில், அவர் குடும்பச் செலவினத்திற்கு அக்கம் பக்கத்தில் கடன் வாங்கியுள்ளார்; எனினும் அவரால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இந்நிலையில், நாளுக்கு நாள் கடன்தொல்லை அதிகமாகவே, கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முன்னதாக, தனது சாவுக்கு மத்திய அரசே காரணம் என்று கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்துள்ளார். இது சக தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஜூம்தாரைப் போலவே, 3 ஆயிரம் பேர் கடனில் சிக்கித் தவிக்கின்றனர்; அவர்களில் பெரும்பாலானோர் ஒருவேளை மட்டுமே உணவு உண்கின்றனர்; இதனால் கடந்த ஆண்டும் 2 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று நாகான் காகித ஆலையின் தொழிற்சங்கத் தலைவரான ஹேமந்தா கக்காட்டி கவலையுடன் தெரிவித்துள்ளார்.