ஆனால் ஒரு சக்திவாய்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை உருவாக்கும் பணி என்பது அவ்வளவு எளிதானதாகவோ அல்லது இயல்பாக நடப்பதாக இல்லை. அந்தப் போராட்டம் மிகக்கடுமையானதாக இருந்தது. ஏனென்றால், இதுதொடர்பாக பல்வேறு கட்சிகள் மற்றும் குழுக்களிடையே முரண்பட்ட கருத்துக்கள் இருந்தன. அந்த முரண்பாடு விரிவாகவும் கூர்மையடையவும் செய்தது. குறிப்பாக இத்தகைய முரண்பாடு கம்யூனிஸ்ட்டுகளுக்கும், இதர இடதுசாரிகளுக்கும் இடையே ஏற்பட்டது என்பது உண்மை. இன்னும் குறிப்பாக கம்யூனிஸ்ட்டுகளுக்கும், காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள் மற்றும் இடதுசாரிகளாக இருந்த காங்கிரசார் மற்றும் இதர தரப்பினருக்கும் இடையே இந்த முரண்பாடு எழுந்தது. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி என்ற பெயரே, அது காங்கிரஸ்காரர்களின் ஒரு அமைப்பு என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது. காந்தியத்தின் மீது உறுதிகொண்ட காங்கிரஸ்காரர்கள் அதை சோசலிசமாக விரிவுபடுத்துவதில் உறுதிகொண்டவர்களாக இருந்தார்கள், அத்தகைய காங்கிரஸ்காரர்கள்தான் இந்தக் கட்சியில் இருந்தார்கள்; காந்தியம், நேருவியம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் இதர சித்தாந்தங்களை அவர்கள் பற்றி நின்றார்கள். அவர்களைப் பொறுத்தவரை, அதாவது இடதுசாரி காங்கிரஸ்காரர்களைப் பொறுத்தவரை, சோசலிசம் என்பது காங்கிரசின் லாகூர் மற்றும் கராச்சி மாநாடுகள் நிறைவேற்றிய தீர்மானத்தின் ஒரு மேம்பட்ட வடிவம் என்றே கருதினார்கள்.
கம்யூனிஸ்ட் செயல்திட்டம்
ஆனால் கம்யூனிஸ்ட்டுகள், துவக்கத்திலிருந்தே இந்திய பாட்டாளி வர்க்க மக்களின் நிலை என்ன என்பது பற்றி உலகளாவிய பார்வையுடன் திட்டவட்ட முறையில் ஆய்வு செய்து, திட்டவட்டமான முறையில் நடைமுறை உத்தியையும் நீண்டகால மற்றும் உடனடி போராட்ட நடவடிக்கைகளை வகுப்பதையும் அதற்கு ஏற்றவாறு ஒரு உறுதியான ஸ்தாபனத்தை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டிருந்தார்கள். 1930ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கட்சியின் வரைவு செயல்திட்டம் இவ்வாறு கூறுகிறது: “உலக வரலாறும், இந்தியாவில் நடைபெற்று வரும் வர்க்கப் போராட்ட நிகழ்வுகளும் எதை உணர்த்துகிறது என்று சொன்னால், இந்திய மக்களை அதிகாரம் பெறச் செய்யும் வரலாற்றுப்பூர்வமான இலக்கினை இந்திய தொழிலாளி வர்க்கத்தின் தலைமையால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதையே உணர்த்துகிறது. அது மட்டுமல்ல, தேசிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, நிலங்களை கையகப்படுத்தி குவித்து வைத்துக் கொண்டு தேசிய வளர்ச்சிக்கு தடையாக இருக்கிற அனைத்து அம்சங்களையும் தகர்த்து அதிலிருந்து விடுதலை மற்றும் அதன் மூலமாக நீண்டகால இலக்குடன் கூடிய புரட்சிகர குணாம்சத்துடனான ஜனநாயக மறுகட்டுமானம் ஆகிய இலக்குகளையும் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையே நிறைவேற்ற முடியும்.
இந்திய தொழிலாளி வர்க்கமானது, இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொழிற்சாலை நடவடிக்கைகள் மூலமாகவும், வர்க்கப் போராட்டங்களின் மூலமாகவும் தொடர்ந்து உறுதிமிக்க முறையில் அணிதிரட்டப்பட்டு வருகிறது; இந்த அணிதிரட்டல் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின்கீழ் நடந்து வருகிறது. அது நாடு முழுவதும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கிற விவசாயிகள் மற்றும் நகர்ப்புற ஏழைகளை தனது அணிதிரட்டுவது என்ற தனது வரலாற்றுப்பூர்வமான இலக்கினை நிறைவேற்றி வருகிறது; பிரிட்டிஷ் ஆட்சியை ஒழித்துக்கட்டவும், இந்திய நிலப்பிரபுத்துவத்தை தகர்க்கவுமான மாபெரும் போராட்டத்தை இந்த வரலாற்று இலக்குகளை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை நிறைவேற்றும் பொறுப்பினை மேற்கொண்டு வருகிறது. ஆனால், மிகப்பெரும் எண்ணிக்கையிலான வெகுமக்களாக இருக்கிற தொழிலாளர்களை அணிதிரட்டும் பொருட்டு, ஒரு பிரத்யேகமான வர்க்கமாக பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்டும் பொருட்டு, அந்த வர்க்கத்தின் பிரத்யேகமான நலன்களை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வினை ஊட்டி, மக்கள் விடுதலைக்கான தேசிய இயக்கத்தில் போராடுகிற தலைமையை வலுப்படுத்தும் பொருட்டு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய இருபெரும் வர்க்கங்களின் புரட்சிகர கூட்டணியை உருவாக்கும் பொருட்டு, அதன் மூலமாக இந்தியத் தொழிலாளி வர்க்கத்தை விடுதலை செய்யும் பொருட்டு, இந்திய விவசாயிகள் மற்றும் நகர்ப்புற ஏழைகளை தேசிய சீர்திருத்தவாதத்தின் பிடியிலிருந்து மீட்கும் பொருட்டு, இந்த ஒட்டுமொத்த போராட்டங்களையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகர போராட்டமாக வழிநடத்தும் பொருட்டு, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான புரட்சியாக அதை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு, இந்த அனைத்து இலக்குகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றும் பொருட்டு, தொழிலாளி வர்க்கம் தனக்கே சொந்தமான ஒரு பாட்டாளி வர்க்க கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி இருக்கிறது.
” இத்தகைய நிலையில், 1930களின் பிற்பகுதியில் சர்வதேச நிலைமை மிகக்கூர்மையான மாற்றங்களை சந்தித்தது. அதன் காரணமாக இந்திய நிலைமையும் மாறியது. 1935-36 ஆண்டுகள் உலகம் முழுவதும் பாசிச எதிர்ப்பு சக்திகள் ஒன்றுபடத் துவங்கின. 1935ஆகஸ்டில் கம்யூனிஸ்ட் அகிலம் விடுத்த அறைகூவலை ஏற்று பாசிச எதிர்ப்பு சக்திகள் தங்களது ஒன்றுபட்ட செயல்பாட்டை உணர்ந்து கரம்கோர்த்தன. இந்தியாவிலும், முதலாளித்துவத்தால் தலைமை தாங்கப்பட்ட விடுதலை இயக்கமானது, உலக அளவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான வலுவான கூட்டணியாக சோவியத் யூனியனையும் இதர சோசலிச - கம்யூனிஸ்ட் சக்திகளையும் பார்க்கத் துவங்கின. இந்த கண்ணோட்டமானது, இந்தியாவில் காங்கிரசால் முற்போக்கான சிந்தனைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படுவதற்கு தூண்டுகோளாக அமைந்தது, காங்கிரசுக்குள் இருந்த நேரு மற்றும் போஸ் போன்ற இடதுசாரி தலைவர்களின் செயல்பாடுகளை மட்டுமல்ல, காந்தியால் தலைமை தாங்கப்பட்ட வலதுசாரி தலைவர்களின் பேச்சுக்களிலும் பிரதிபலித்தது. இந்த நிகழ்வுப்போக்குகளுக்கு முன்பே கம்யூனிஸ்ட்டுகள் இந்திய தேசிய காங்கிரசின் திட்டத்திற்கு ஒரு விவசாய எழுச்சி வடிவத்தை கொடுக்கத் துவங்கியிருந்தனர். இத்தகைய திசையில், காங்கிரசின் 1928ஆம் ஆண்டு மாநாட்டில் ஒரு திருத்தம் முன்மொழியப்பட்டது; அது தோற்கடிக்கப்பட்டது. அந்தத் தோல்வியைத் தொடர்ந்து 1930களில் கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ் சோசலிஸ்ட் மற்றும் இதர முற்போக்காளர்களின் ஒத்துழைப்புடன் விவசாயிகள் சங்கத்தின் கீழ் இந்திய விவசாயிகளை அணிதிரட்டுவதற்கான தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ளத் துவங்கியிருந்தனர். இந்தப் பின்னணியில்தான், 1930களின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒற்றுமையின் வளர்ச்சிப்போக்காக விவசாயிகள் சங்கத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் குறிப்பிடத்தக்க பலன்கள் கிடைத்தன; இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ஒற்றுமை ஒரு குறிப்பிடத்தக்க, தீர்மானகரமான பங்கினை ஆற்றியது.