tamilnadu

img

அனைத்து பட்டாசுத் தொழிலாளர்களுக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கிடுக.... சிஐடியு வலியுறுத்தல்

விருதுநகர்:
தமிழக அரசு பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரண நிதி ரூ.10 ஆயிரம் ஆக வழங்க வேண்டும் என இந்திய தொழிற் சங்க மையம் ( சிஐடியு) தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து   சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது : விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகளும், 400க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகளும் உள்ளன. இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு சார்பில், பட்டாசு, தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணம்  வழங்கப்படும் என ஏப்ரல் 9 அன்று அறிவிக்கப்பட்டது. 

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணியாற்றும்  தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இதில் இ.எஸ்.ஐ., பி.எப். செலுத்தும் தொழிலாளர்களுக்கு மட்டும் நிவாரண நிதி வழங்கப்படுவதாக தெரிய வருகிறது. இதனால் 75 சதவீத தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி கிடைக்காத நிலை ஏற்படும். எனவே பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்க  வேண்டும்.

மேலும், தற்போதுள்ள விலைவாசி உயர்விற்கு  இந்தத்  தொகை போதுமானதல்ல. எனவே தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் ரூபாய்  நிவாரண நிதியாக வழங்க  வேண்டும். இதேபோல்,  அச்சகத்  தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்க  வேண்டும்  என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.