இராஜபாளையம், மார்ச்.29- விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தைச் சேர்ந்த 60 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது கார் ஓட்டுனர், மனைவி மற்றும் மகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களது ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த முதியவர். இவர் தனியார் நூற்பாலையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அரசு மருத்துவமனையில் ஆய்வகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தனியாக ரத்த வங்கியும் நடத்தி வருகிறார். இவர்களது மகன் மற்றும் மகள் இருவரும் பயிற்சி மருத்துவர்களாக உள்ளனர். இந்தநிலையில், கடந்த 10 தினங்களாக முதியவருக்கு கடுமையான காய்ச்சல்,சளி மற்றும் இருமல் இருந்துள்ளது. இதனால், அவர் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
மேலும், இவருக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது கார் ஓட்டுனர், மனைவி மற்றும் மகனுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, 4 பேரும் கடந்த 3 தினங்களுக்கு முன்பு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நால்வரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், முதியவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர், அதற்கான சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். கொரோனா தொற்றுக்கான காரணம் :, இவர்களது மகன் திருமணம் கடந்த மார்ச் 5 ல் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளி நாடுகளில் இருந்து பலர் வந்திருந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் மூலம் முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.