விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதித்தவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக சென்றால் போதிய மருத்துவ வசதிகள், சிகிச்சையின்றி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
விருதுநகரில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி மண்டல அலவலகத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பணிபுரிந்த 21 பேருக்கும் கடந்த ஜூலை 8-ஆம் தேதி மாதிரிகள் எடுக்கப்பட்டன. வங்கியில் பணிபுரியும் சீனிவாசன் என்பவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சைபெற்று வந்த அவருக்கு வெள்ளிக்கிழமை இரவு மூச்சுத் திணறல் அதிகரித்துள்ளது. எனவே, அவரை மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்குள்ள மருத்துவமனைகளில் அவரை சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை. இதையடுத்து, இராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை விருதுநகர் பாத்திமாநகரைச் சேர்ந்த தாமதோரன் என்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளுக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்படவில்லை. எனவே, விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை கொரோனா அறிகுறி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா வார்டில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை அளிக்கவில்லை. இதையடுத்து மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 வாகனத்தில் அனுப்பி வைத்தனர். ஆனால், கடந்த ஞாயிறன்று மாலை அவர் மூச்சுத் திணறலால் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் சாதாரண காய்ச்சல், திடீரென ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் அவதிப்படும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளிலும், இதற்கு சிகிச்சை தருவதில்லை. இதனால் பலர் நாள்தோறும் உயிரிழந்து வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் வழக்கம் போல சிகிச்சையளிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் வழக்கம் போல் அனுமதிக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்யின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் கூறுகையில், இதுபோன்ற சம்பவங்களால் விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இது சாதாரண உயிரிழப்புகள் அல்ல. அரசு செய்யும் கொலைகள் போன்றவையே ஆகும். வங்கிகள், காவல்துறை, அஞ்சல்துறை, மின்வாரியம், சுகாதாரத்துறை, துப்புரவுத் தொழிலாளர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டால் சிறப்பு சிகிச்சையளிக்க வேண்டும் மேலும், தனியார் மருத்துவமனைகளில் உயர் இரத்த அழுத்தம், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க தமிழக அரசு விதித்துள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என கட்சியின் சார்பில் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இதுபோன்ற பாதுகாக்க முடிகின்ற உயிர்கள் பலியாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.