tamilnadu

img

விருதுநகரை மறந்த முதல்வர்.... 24 மணி நேரத்தில் கிடைக்கிறதா கொரோனா முடிவு?

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால்  கடந்த ஜூன் 30-ஆம்தேதி வரை 500 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது பாதிப்பு பத்தாயிரத்தை கடந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 114 ஆகியுள்ளது. கடந்த 35 நாட்களில் இருபது மடங்கு தொற்று அதிகரித்துள்ளது.   தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டம் நோய் பாதிப்பில் ஆறாவது  இடத்தில் உள்ளது.பரிசோதனை மாதிரிகள் அதிகளவில் எடுத்தபோதும், முடிவுகள் வெளிவர பத்து நாட்கள் வரை ஆகிறது.விருதுநகரில் உள்ள மருத்துவமனை யில் மட்டுமே பரிசோதனை நடைபெறுகிறது. பிற இடங்களில் எடுக்கப்படும் மாதிரிகள் நாகர்கோவில், தேனி, கோயம்புத்தூர், சென்னை ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால், மிகவும் தாமதமாகவே முடிவுகள் வெளி வருகின்றன. இதன் காரணமாக நோய் பரவல் அதிகமாகிறது.

தமிழக முதல்வர் கூறும் போது, அமெரிக்காவில் கூட பரிசோதனை முடிவுகள் வெளியே தெரிய மூன்று நாட்கள் ஆகிறது. ஆனால், தமிழகத்தில்24 மணி நேரத்தில் முடிவுகள் தெரிவிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள் ளார்.ஆனால், முதல்வரின் கூற்றுப்படி, விருதுநகர் மாவட்டத்தின் நிலைமை இல்லை. மாறாக பரிசோதனை மேற்கொண்ட 10 ஆயிரம் பேருக்கு பலநாட்கள் ஆகியும் இன்னும்  முடிவுகள் வெளி வரவில்லை.தனியார் மையங்களில் பரிசோதனை செய்வதில் பல குளறுபடிகளும் தவறுகளும் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஆய்வு செய்யவும்,அதை சரிபார்க்கவும் கூடுதலானநபர்களை நியமிக்கவேண்டும். இராஜபாளையம், சிவகாசி, அருப்புக் கோட்டை  மருத்துவமனைகளில் பரிசோதனை மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் மொத்தம் ஆறு ஆம்புலன்ஸ்கள் மட்டுமே உள்ளன. இதனால், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் தங்களது சொந்த வாகனங்களிலோ அல்லது தனியார் ஆம்புலன்சுக்கு பணம் கொடுத்து சிகிச்சை மையங்களுக்கு செல்லும்  நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதலாக இலவச ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும்.

 தனியார் கல்வி நிறுவனங்கள், அரசு கொரோனா பராமரிப்பு மையங்களில் சேர்க்கப்படுவோர், இரண்டு அல்லது மூன்று நாட்களில் திருப்பி அனுப்பப்படுகின்றனர். நோய் அறிகுறி குறைவாக இருப்பவர்களுக்கு பாதிப்பு இல்லை. நோய் பாதிப்பு அதிகம் உள்ளவர்களும் திருப்பி அனுப்பி வைக்கப்படும் நிலை உள்ளது. சிகிச்சை மையங்களில் சுடுநீர் மற்றும் சுகாதார வசதிகள் மிகக் குறைவாக உள்ளது. எனவே, கொரோனா பராமரிப்பு மையங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். உணவு, மருந்து, சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணிகளை துரிதப்படுத்தி ஹோமியோ மருந்து, கபசுரகுடிநீர் வழங்கவும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அளவில் அதிக பாதிப்புள்ள விருதுநகர் மாவட்டத்தில் சுகாதா ரத்துறை அதிகாரி ஒரு நாள் இரவு ஒன்பது மணிக்கு வந்து அரை மணி நேரம் மட்டுமே ஆய்வு நடத்தி விட்டுச் சென்றுள்ளார். தமிழக முதல்வரோ, மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு சொன்ற போதும், விருதுநகரில் ஆய்வு மேற்கொள்ளவில்லை. மாநில அரசு அறிவித்த சிறப்பு அதிகாரியைக் காணவில்லை. மாவட்ட ஆட்சியரோ மனுக்களை கூட பொது மக்களிடம் பெறுவதில்லை. எனவே தமிழக அரசு விருதுநகர் மாவட்டத்தின் மீது விசேஷ கவனம்செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறை வேற்றியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டக்குழு கூட்டம்மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.குரு சாமி தலைமையில் நடைபெற்றது., மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாலசுப்பிரமணியன், எம்.மகாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத் தில்தான் மேற்கண்ட விபரங்கள விவ ரிக்கப்பட்டுள்ளன.  

படக்குறிப்பு : மதுரையில் கொரோனா குறித்து வியாழனன்று ஆய்வு நடத்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளியன்று காலை விருதுநகர் மாவட்டத்தைக் கடந்து திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா ஆய்வு நடத்தச் சென்றார். அவரை விருதுநகர் மாவட்ட எல்லையில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி வரவேற்றார்.

    (ந.நி.)