tamilnadu

img

பல நாட்களாக முழுப் பட்டினி கிடந்த 35 சதவிகிதம் பேர்..... 80% கிராமப்புற மக்களின் வேலையைப் பறித்த ஊரடங்கு...

புதுதில்லி:
கொரோனா ஊரடங்கையொட்டி 80 சதவிகித கிராமப்புற மக்கள் தங்களின் வேலைவாய்ப்பை இழந்ததாக கோவன் கனெக்‌ஷன் - லோக்நீதி சிஎஸ்டிஎஸ் மற்றும் (Gaon Connection Lokniti-CSDS) நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த நிறுவனங்கள், நாடு முழுவதும் பல்வேறு தரப்பு பொருளாதார பிரிவைச் சேர்ந்த25 ஆயிரத்து 300 பேரிடம் ஆய்வை மேற் கொண்டு, அதன்முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளன. அதில்தான், ஊரடங்கின்போது, கிராமப்புறங்களில் 80 சதவிகித மக்கள் பணியில்இருந்து நிறுத்தப்பட்டுள்ளது தெரிய வந் துள்ளது. அவ்வாறு பணி இழந்தவர்களில் சுமார் 68 சதவிகிதம் பேர் மிகமோசமான வறுமையை எதிர்கொண்டதாக கூறியுள்ளனர். 

அதாவது, மோசமான வறுமையை எதிர் கொண்ட 68 சதவிகிதம் பேரில், 35 சதவிகித குடும்பங்கள், நாள் முழுவதும் உணவின்றி, பல நாட்கள் பட்டினி கிடந்துள்ளனர். பட் டினிக் கொடுமையிலிருந்து தப்பிக்க, 8 சதவிகிதம் பேர், தங்களின் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக தொலைபேசி, கடிகாரம்போன்றவற்றை விற்றுள்ளனர். 7 சதவிகித குடும்பங்கள் நகைகளை அடமானம் வைத் துள்ளனர். 5 சதவிகிதம் பேர் அடமானம் வைத்திருந்த நிலத்தை ஒரேயடியாக விற்றுள்ளனர். 23 சதவிகிதம் பேர் கடன் வாங்கிச் சமாளித்துள்ளனர். 

71 சதவிகிதம் பேர், ரேசன் பொருட்கள் தான் நெருக்கடியைச் சமாளிக்க உதவியதாகவும், மகாத்மா காந்தி ஊரக வேலையுறுதித் திட்டம் தங்களுக்கு கைகொடுத்ததாக 20 சதவிகிதம் பேரும் குறிப்பிட்டுள்ளனர்.கிராமப்புற விவசாயிகளில் 35 சதவிகிதம் பேர், தங்களின் விளைபொருட்களுக்கும், பால் மற்றும் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கும் போதிய விலை கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு மிகமோசமான காலமாக இருந்ததாக, 40 சதவிகித கிராமப்புற மக்கள் பதிலளித்துள்ளனர். இந்தக் காலத்தில் மருந்துப் பொருட்கள், சுகாதார சேவைகள் கிடைக்கவில்லை என 38 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி கிடைப்பதில் தடை ஏற்பட்டதாக 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.கொடுமை என்னவென்றால், இவ்வளவுப் பிரச்சனைகளுக்கு இடையே, நான்கில்மூன்று பேர், கொரோனா தொற்றைக் கையாள்வதில் மோடி அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக கூறியும் அதிர்ச்சி அளித்துள்ளனர்.