கொல்கத்தா:
குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய, பாஜக மாநிலங்களவை எம்.பி. ரூபா கங்குலியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பவர், ரூபா கங்குலி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவரது மகன் ஆகாஷ் முகர்ஜி. இவர் தனது சொகுசுக் காரை, வியாழனன்று இரவு கொல்கத்தா கோல்ப் கிரீன் பகுதியில் வேகமாக ஓட்டியுள்ளார். அப்போது, நிலைதடுமாறி, கோல்ப் கிளப்பின் சுவரில் காரை பலமாக மோதியுள்ளார். இதில் அந்த சுவரே இடிந்து விழுந்துள்ளது. ஆகாஷூக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
போலீசார் நடத்திய விசாரணையில், ஆகாஷ் குடித்து விட்டு வாகனம் ஓட்டியது தெரியவந்துள்ளது. ஆகாஷ் ஆபத்தான முறையில் காரை ஓட்டி வந்ததாக, அதனை நேரில் பார்த்தவர்களும் அதிர்ச்சியுடன் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஆகாஷை போலீசார் கைது செய்துள்ளனர்.பிரபல பாடகியும், வங்காள நடிகையுமான ரூபா கங்குலி, 2015-ஆம் ஆண்டு பாஜக-வில் சேர்ந்தார். மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஹவுரா வடக்கு தொகுதி யில் போட்டியிட்டு தோற்றார். எனினும் பாஜக அவரை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தது.