விழுப்புரம், மார்ச் 14- விழுப்புரம் மாவட்டத்தில் கண்டாட்சிபுரம் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட வட்டமாகும். இங்கு இன்னும் வட்டாட்சியர் அலுவலகம் தவிர மற்ற நீதிமன்றம், மருத்துவமனை உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் எந்தவித முயற்சியும் மேற்கொண்டதாக தெரியவில்லை. இப்பகுதி மக்கள் வட்டாட்சியர் அலுவலக வேலை தவிர்த்து மற்ற அரசு வேலைகளுக்கு சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ள மாவட்ட தலைநகரான விழுப்புரம் செல்லவேண்டி உள்ளது. இப்பகுதி பெரும்பாலும் கிராமபுறங்களையே அதிகளவு உள்ளடக்கிய பகுதி. இங்கு உள்ள கிராம மக்கள் சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் பெற வட்டாட்சியர் அலுவலகம் வரவேண்டும் என்றால் எந்த கிராமத்திற்கும் சரியான பேருந்துகள் வசதி இல்லை. இதனால் மக்கள் பெரும் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இங்கு உள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு சாலை வசதி, குடிநீர், சுகாதாரம் என்பது முற்றிலும் மறுக்கப்பட்ட நிலையில் உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட வட்டம் என்பதால் சில ஆண்டுகளாகியும் எந்தவிதமான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பில் முன்னேற்றம் இல்லை. இங்கு உள்ள முகையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டாட்சிபுரம்,மடவிளாகம்,செங்கமேடு,அடுக்கம் உள்ளிட்ட 35 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நூறு நாள்வேலை கேட்டு மக்கள் மனுவுக்கு மேல் மனு கொடுத்தும் பல்வேறு கட்ட போராட்டங்களை பல வடிவங்களில் நடத்தியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செவிசாய்ப்பதாக தெரியவில்லை. நூறு நாள்வேலை கடந்த காலங்களில் ஆண்டுகளுக்கு ஒரு நபருக்கு 40 முதல் 60 நாட்கள் வேலை கொடுத்தனர், ஆனால் தற்போது வேலையும் கொடுப்பது இல்லை. அப்படியே கொடுத்தாலும் 5 முதல் 15 நாட்கள் மட்டுமே வேலை கொடுக்கின்றனர். அதுவும் முழு கூலி கிடைப்பது இல்லை. அந்த பாதி கூலியும் பல மாதங்களாக வழங்கப்படவில்லை. மேலும் பண்ணைகுட்டை, வரம்பு மடித்தல், தரிசு நிலம் மேம்பாடு, கோழிப்பண்ணை, உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இயந்திரங்களை வைத்து வேலைகளை முடித்து விட்டு நூறு நாள்வேலை பணத்தை அதிகாரிகள் கூட்டு கொள்ளை அடித்து வருகின்றனர்.
35 கிராமங்களில் நாளை போராட்டம்
கண்டாட்சிபுரம் தாலுக்காவுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால், நூறு நாள்வேலை உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளுக்கான கோரிக்கைகளை உடனடியாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்களை திரட்டி வரும் திங்களன்று (மார்ச் 16) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 35 மையங்களில் கஞ்சி தொட்டி போராட்டம் நடத்தப்படவுள்ளது.