விழுப்புரம், ஆக. 31- விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) சுரேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது: விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது பருவமழை பரவலாக துவங்கி யுள்ளது. இதனால் எதிர்வரும் சம்பா சாகுபடிக்குத் தேவையான 54,680 மெட்ரிக் டன் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு மையங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப் பட்டுள்ளன. குறிப்பாக விவசாயிகள் அதிகம் வாங்கும் யூரியா 13,750 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 10,470 மெட்ரிக் டன், என்.பி.கே. 21,100 மெட்ரிக் டன், பொட்டாஷ் 6,980 மெட்ரிக் டன் அளவில் இருப்பு வைக்கப்பட்டு, உர விற்பனை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேளாண் உதவி இயக்குநர் தலைமையில், மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வுகளில், தரமற்ற உரங்கள் இருந்த விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உர விற்பனையாளர்கள் உரிமம் இல்லா மல் விற்பனை செய்வது, உரிமம் இல்லாத கிடங்கில் இருப்பு வைப்பது, நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது, விற்பனை ரசீதை விவசாயிகளுக்கு வழங்காமல் இருப்பது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை உரிமமும் ரத்து செய்யப்படும். விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி, உர விற்பனை நிலை யத்தில் உள்ள பி.ஓ.எஸ். கருவி மூலமாக மட்டுமே உரம் வாங்க வேண்டும். அப்போதுதான், சரியான விலைக்கு உரம் கிடைப்பதையும், இருப்பு மற்றும் விற்பனையையும் முறையாக கண்காணிக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.