விழுப்புரம், ஜூன் 21- விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 8ஆம் தேதி வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 384,. அதில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 329. கடந்த 9ஆம் தேதிக்கு பிறகு தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த 11 நாட்களில் 10 பேருக்கு மேல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை (கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள்) மற்றும் போக்கு வரத்து ஊழியர்களுக்கும் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அந்த காவல் நிலையம் மூடப்பட்டு அருகே உள்ள காவலர் குடியிருப்பில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. மேலும், அந்தக் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த 18 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவப் பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்டனர். இது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடையே யும், பொதுமக்களிடையேயும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.