tamilnadu

img

தலித் மக்களை காலில் விழ வைத்த கட்டப் பஞ்சாயத்து.... விழுப்புரம் அருகே தீண்டாமைக்கொடுமை...

விழுப்புரம்:
ஊருக்கு வெளியில் வயதானவர்கள் தரையில் அமர்ந்து இருக்க அவர்களுக்கு பாதுகாப்பாக இளசுகள் சுற்றி நிற்க; மூன்றுபேர் தரையில் விழுந்து மன்னிப்பு கோரும்புகைப்படமும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து விசாரித்தபோது விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத் திற்குட்பட்ட ஒட்டனந்தல் கிராமத்தில் தான் இப்படிப்பட்ட தீண்டாமைக்கொடுமை நடந்திருப்பது தெரியவந்தது.ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள மாரி
யம்மன் கோவிலுக்கு இம் மாதம் 12ஆம்தேதி திருவிழா நடத்த தலித் மக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்கள். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அதே ஊரைச் சேர்ந்த வேறு சமூகத்தைச்சேர்ந்த ரமேஷ் என்பவர் காவல் நிலையத் திற்கு தகவல் சொன்னதாக கூறப்படுகிறது.இதனையடுத்து, கிராமத்திற்கு வந்த காவல்துறையினர் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருப்பதையும் கோவில்திருவிழாக்களுக்கு தடைவிதித்து இருப்பதையும் எடுத்துரைத்து திருவிழாவை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். தலித் மக்களும் காவல்துறை மற்றும் அரசின் உத்தரவை மதித்து திருவிழாவை ரத்து செய்துள்ளனர்.

இந்த திருவிழாவில் இசை நிகழ்ச்சிநடத்த ஏற்கனவே முன்பணம் வாங்கியிருந்த இசைக்குழுவினருக்கு திருவிழா நிறுத்தப்பட்ட தகவல் செல்வதற்குள் அன்று மாலையே ஒட்டனந்தல் கிராமத்திற்கு வந்துவிட்டனர். தாங்கள் கொண்டு வந்திருந்த வேனில் இருந்தபடியே அந்த குழுவினர்தங்களது இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். ஆனாலும் கூட்டம் கூடவில்லை. திருவிழா நடத்துவதாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் அதே நபர், இசை நிகழ்ச்சி நடைபெற்றதையும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததாக கூறப் படுகிறது.

உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் இசைக்கருவிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றனர். தங்களது கிராமத்தால் இசைக்குழுவினர் பாதிக்கப்பட வேண்டாம் என்றும் அவரது இசைக்கருவிகளை இசைக்குழுவினரிடம் ஒப்படைத்து விடுமாறு காவல்துறையிடம் தலித் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை ஏற்றுக்கொண்ட காவல்துறையினரும் இசைக்கருவிகளை திரும்பவும் ஒப்படைத்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து, காவல்துறைக்கு தகவல் கொடுத்த நபரிடம் ஏன் இப்படி செய் தீர்கள்? என்று தலித் பகுதியைச் சேர்ந்த சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரம் குறித்து தங்கள் பகுதி பஞ்சாயத்தாரிடம் கூறியிருக்கிறார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் அந்த நபர். இதனையடுத்து கட்டப் பஞ்சாயத்து கூடியிருக்கிறது. வாய்த்தகராறு ஏற்பட்ட சம்பவம் ஏற்கத்தக்கது அல்ல என்றும் “தாங்கள் செய்தது தவறுதான்” என்றும் கூட்டத்தில் பங்கேற்ற தலித் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனாலும், இதை ஏற்க மறுத்த சாதி ஆதிக்க சக்திகள் “காலில்விழுந்து மன்னிப்பு கோரவும்” என தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தலித் பகுதியை சார்ந்த பெரியவர்கள் 3 பேர், பஞ்சாயத்தார் காலில் விழுந்து இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காது. நாம் ஒற்றுமையாக இருப்போம் எனக் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றுள்ளனர்.இதுகுறித்த வீடியோ மே 14 வெள்ளிக்கிழமையன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன், திருவெண்ணெய் நல்லூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ராமதாஸ் ஆகியோரை முழுமையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து இரு தரப்பினரும் தனித்தனியே திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இப்புகாரின் பேரில் இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு தரப்பில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும், மற்றொரு தரப்பினர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் அங்கு வேறு ஏதும் பிரச்சனை இல்லை என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது போன்ற சம்பவங்கள் மாவட்டத்தில் இனிமேல் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றால் இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.இச்சம்பவம் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதால் மாவட்ட ஆட்சியரும், காவல்துறை துணை கண்காணிப்பாளரும் கிராமத்திற்குச் சென்றுவிசாரணை நடத்தினர்.மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவம் நடந்த கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.பின்னர்  தலித் பெரியவர்களை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மற்றொரு தரப்பு கொடுத்த புகாரின் பேரில் தலித் மக்கள் 4 பேர் மற்றும் பெயர் குறிப்பிடாத 50 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.   (ந.நி)