வாஷிங்டன்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் முக்கிய மாகாணமான மின்னசொட்டாவில் ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின நபரை உள்ளூர் போலீசார் ஒருவர் தனது கால் முட்டியால் கழுத்தில் அழுத்தி கொன்றார். இதையடுத்து போலீசார் நிறவெறியுடன் நடந்து கொண்டதாக கூறி கொரோனா ஊரடங்கிற்கு இடையே நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் வெடித்தன.
இந்த இனவெறிக்கு அமெரிக்காவின் வெள்ளை நிற மக்களும், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் அவரவர் சொந்த நாட்டில் எதிர்ப்பு போராட்டம் நடத்தினர். குறிப்பாக ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலிய கண்டங்களில் கலைநிகழ்ச்சியுடன் பிரமாண்ட பேரணி நடந்தது.
அமெரிக்காவில் இடைவிடாது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அட்லாண்டா நகர் பகுதியின் உள்ள ஒரு உணவகத்தில் (வெள்ளியன்று இரவு (இந்திய நேரப்படி சனியன்று பகல்)) ரேஷார்ட் புரூக்ஸ் (27) என்ற கருப்பின வாலிபர் ஒருவர் உறங்கிக்கொண்டிருந்தார். விசாரணைக்கு அவரை போலீசார் அழைத்தனர். வர மறுத்ததுடன் தப்பியோட முயன்றதாக கூறி போலீசார் அவரை துப்பாக்கி மூலம் சுட்டுக்கொன்றனர்.
இந்த தகவல் விடியோவாக வெளியாக அமெரிக்காவில் மீண்டும் போராட்டம் வெடித்தது. மேலும் சம்பவம் நடைபெற்ற உணவகத்தை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரி காரெட் ரோல்ப் பணியில் இருந்து நீக்கப்பட்டதால் போராட்டம் சற்று கட்டுக்குள் வந்தது. கொல்லப்பட்ட புரூக்சின் இளைய மகளுக்கு நேற்று பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.