வேலூர், நவ.27- வேலூர் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்கப்படும் என்று சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்டம் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அதையடுத்து வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால். தலைமையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் வாணியம்பாடி, மேல்விஷாரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், குடியாத்தம் இரண்டு வருவாய் கோட்டங்க ளும், வேலூர், காட்பாடி அணைக்கட்டு, கே.வி. குப்பம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஆகிய ஆறு தாலுகாகளை உள்ளடக்கியதாகும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை,அரக்கோணம் ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களும் ஆற்காடு,வாலாஜா, அரக்கோணம், நெமிலி ஆகிய நான்கு தாலுகாவினை உள்ளடக்கியதாகும். திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி ஆகிய இரு வருவாய் கோட்டங்களும் ஆம்பூர்,வாணியம்பாடி, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி ஆகிய தாலுகாகள் உள்ளடக்கியதாகும். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு எஸ்.திவ்யதர்ஷினி மாவட்ட ஆட்சியராகவும்,திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ம.ப.சிவனருள் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டனர். புதியதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழனன்று(நவ.27) தொடங்கி வைக்கிறார். திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழா காலை 10.30மணிக்கு திருப்பத்தூர் டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழா ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார்,கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிக்கப்பட்ட பணிகளைத் தொடங்கி வைத்தும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 94 கோடியே 37 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 89 கோடியே 73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். இதில் தமிழக அமைச்சர்கள் சட்டப்பேரவை துணைத் தலைவர், அரசு தலைமை கொறடா, தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.