tamilnadu

img

வேலூரில் கைதி சித்ரவதை: 11 சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம்

வேலூர்,நவ.6- வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்த விவகாரம் தொடர்பாக மேலும் 11 சிறை காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மாணிக்கம் கோட்டை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (30) 
என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி தனது வீட்டு வேலைகளுக்கு கைதிகளை சட்ட விரோதமாக பயன்படுத்தியதாகவும் அப்போது டிஐஜி வீட்டில் சிவக்குமார் திருட்டில் ஈடுபட்டதாக கூறி சிறையில் வைத்து 90 நாள்கள் தாக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டதாக சிவகுமாரின் தாயார் கலாவதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். 

நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் சிபிசிஐடி போலீசார் ,சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உள்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், கைதி சிவக்குமார் தாக்கப்பட்டது உறுதியான நிலையில் அவரை சேலம் மத்திய சிறைக்கு இடமாற்றினர். இதில் மேலும், மத்திய சிறை காவலர்களான ராஜு, ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்செல்வன், விஜி, பெண் சிறை காவலர்கள் சரஸ்வதி, செல்வி, சிறை வார்டன் சுரேஷ், சேது ஆகிய 14 பேரை பணியிட நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.