சென்னை.பிப்.11- காவேரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸிட் சங்கம், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இதற்கான அவசரச் சட்டத்தை கொண்டு வரவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ தமிழக மக்களுக்கு உணவு அளித்து வந்த, தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்து வரும் காவேரி டெல்டா மாவட்டங்கள் கடந்த பல்லாண்டுகளாக கர்நாடக அரசின் பிடிவாதத்தால் காவேரி நீர் கிடைக்காமல் பல லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுபடி கைவிட்டு அவதிப்பட்டு வந்தனர்.
இந்த சூழ்நிலையில் “வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிவது போல்” மத்திய அரசு கடந்த மூன்றாண்டுக்கு முன்பு விவசாய வளம் கொழிக்கும் காவேரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஈத்தேன் எரிவாயுகளை எடுக்க தொடர்ந்து திட்டங்களை அறிவித்து விவசாயிகள்,பொதுமக்கள் கடும் எதிர்ப்பை மீறி அத்திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், அரசு நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, “தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவேரி டெல்டா பகுதிகளிலுள்ள விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத் திடவும் காவேரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்” என்றார். முதல்வரின் இந்த அறிவிப்பை அனைத்து பத்திரிகையாளர்களின் சார்பிலும் டியூஜே வரவேற்பதுடன், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இதற்கான அவசரச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளார்.