tamilnadu

img

யோகி அரசு ஏமாற்றியது ரூ.10ஆயிரம் கோடி

உத்தரப்பிரதேசத்தில் கரும்பு விவசாயிகளுக்கு யோகி ஆதித்யநாத் அரசு மார்ச் 22 வரை வழங்கியிருக்க வேண்டிய 10ஆயிரத்து 74 கோடியே 98 லட்சம் ரூபாய் கிடைக்காததால் அம்மாநிலத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் பாஜக அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இது மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் பாஜக தலைவர்கள் அச்சத்தில் உள்ளனர். 2018 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விளைந்த கரும்பை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ததில் ரூ.9,836.17கோடியும், 2017-18இல் கொள்முதல் செய்த கரும்புக்கான பாக்கித் தொகையாக ரூ. 238.81கோடியும் உள்ளது. பணம் கிடைக்க வேண்டிய விவசாயிகளில் 45 சதவீதத்தினர் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் உள்ளது பாஜகவை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 2014 மக்களவை தேர்தலின்போது மத்தியிலும் உபியிலும் பாஜக ஆட்சியில் இல்லை. எதிர்கட்சியாக இருந்து பாஜக கரும்பு விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக கூறி வெற்றி பெற்றது. உபியில் 48 லட்சம் எக்டேரில் கரும்பு விவசாயம் செய்கிறார்கள். 


பிரியங்கா குற்றச்சாட்டு

கரும்புக்கான கொள்முதல் விலையில் 2016-17க்கு பிறகு வெறும் பத்து ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இதை சுட்டிக்காட்டியதுடன் விவசாயிகளுக்கான பாக்கி தொகையை அரசு வழங்காததால் அவர்களது குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்பட்டு, உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். நரேந்திரமோடி பணக்காரர்களுக்கு மட்டுமே காவலாளி எனவும், ஏழைகள் குறித்து சிந்திக்காதவர் எனவும் கூறியதை கரும்பு விவசாயிகள் கரவொலியெழுப்பி ஆமோதித்தனர். மொத்தமுள்ள பாக்கி தொகையில் ரூ.4,547.97கோடியை வழங்க வேண்டிய சர்க்கரை ஆலைகள் முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மீரட், பாக்பத், கைரனா, முசாபர் நகர், பிஜிநோர், சகரான்பூர் ஆகிய தொகுதிகளில் அமைந்துள்ளன. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் கரும்புக்கான தொகையை 14 நாட்களில் வழங்க வேண்டும் என்கிற நடைமுறையை மீறி பாஜக அரசு விவசாயிகளை வஞ்சித்துள்ளது.