tamilnadu

img

உ.பி. மாநிலத்தில் தோல்வியைத் தழுவிய எஸ்.பி.- பிஎஸ்பி கூட்டணி

லக்னோ:
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில், பாஜக 60 இடங்களைப் பெற்றுள்ளது.மாபெரும் வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி கூட்டணி, இங்கு பெரும் தோல்வி அடைந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 78 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது. பகுஜன் சமாஜ் கட்சி 80 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெல்லவில்லை. ஆனால், இந்த முறை இரு கட்சிகளும் இணைந்து மெகா கூட்டணி அமைத்ததால், அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றிவாய்ப்பு, இருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிகள் பெரிய அளவிற்கு முன்னேற்றம் எதையும் பெற முடியவில்லை. 

சமாஜ்வாதி 5 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 11 தொகுதிகளிலும் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன. பாஜக கடந்த முறையை விட 11 இடங்களைக் குறைவாகவே பெற்றாலும் - ஒட்டுமொத்தமாக 60 இடங்களை வென்று, மீண்டும் தன்னைத் தக்கவைத்துள்ளது.வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, ஏறக்குறைய 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நடிகை ஹேமமாலினி ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

காங்கிரசைப் பொறுத்தவரை, ரேபரேலியில் மட்டும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியிலேயே, பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.