tamilnadu

img

உத்தரப்பிரதேச மக்கள் எங்களைத்தான் ஆதரித்தார்கள் பாஜக அடைந்துள்ள வெற்றி  சந்தேகத்திற்கு உரியது..

லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் பாஜக பெற்றிருக்கும் வெற்றி, வாக்கு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்த சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். 

பகுஜன் சமாஜ் கட்சி - சமாஜ்வாதி கட்சி கூட்டணியைத்தான், இந்த தேர்தலில் உத்தரப்பிரதேச மக்கள் ஆதரித்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாயாவதி மேலும் கூறியிருப்பதாவது:

மக்களவைத் தேர்தல் தோல்வியை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கான மோசமான தோல்வியாக கருதுகிறேன். சமாஜ்வாதியும் - பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்ததால்தான் தோல்வி ஏற்பட்டது என்ற வாதத்தை ஏற்க முடியாது. மக்களும் இந்த தோல்வியை ஏற்கத் தயாராக இல்லை. இவற்றை மக்களின் உணர்வுகளுக்கும், விருப்பங்களுக்கும் எதிரான வெற்றியாகவே பார்க்கிறேன்.

இந்த தேர்தலில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக நான் பார்க்கிறேன். குறிப்பாக மின்னணு வாக்கு இயந்திரங்களில் ஏராளமான தில்லுமுல்லுகள் நடந்திருப்பதாக என்னுடைய பார்வைக்கு வந்துள்ளது. மக்களின் நம்பிக்கையை, மின்னணு இயந்திரம் பொய்த்துப் போக வைத்துள்ளது.அனைத்துக் கட்சிகளும் வாக்குச்சீட்டு முறையில்தான் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தபோது, பாஜகவும், தேர்தல் ஆணையமும் மட்டுமே அதற்கு சம்மதிக்கவில்லை. இதன் மூலம் எங்கோ தவறுகள் நடந்திருக்கின்றன.

தலித்துகள், சமூகத்தில் விளிம்புநிலையில் இருப்போருக்கான பிரதிநிதித்துவம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆனால், ஆளும் பாஜக இந்த பிரதிநிதித்துவத்தை வாக்கு இயந்திரங்கள் மூலம் கபளீகரம் செய்துவிட்டது.மின்னணு வாக்கு இயந்திரத்தில் தொடர்ந்து குளறுபடிகள் நடப்பதை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். இதை உச்ச நீதிமன்றமும் கருத்தில் எடுத்து வாக்கு சீட்டு முறைக்கு பரிசீலிக்க வேண்டும். மின்னணு வாக்கு இயந்திர முறையில் தேர்தல் நடத்துவதில் மக்களுக்கும் மனநிறைவு இல்லை.
இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில், கடந்த 2014-ஆம் ஆண்டில் பாஜக மட்டும் 71 இடங்களில் வென்றிருந்தது.  ஆனால், 2019 தேர்தலில், முக்கிய எதிர்க்கட்சிகளான பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணியாக போட்டியிட்டும் பாஜக 63 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 9 இடங்களும், சமாஜ்வாதிக் கட்சிக்கு 5 இடங்களும், காங்கிரஸ் மற்றும் அப்னா தளம் கட்சிகளுக்கு தலா ஓரிடமும் மட்டுமே கிடைத்துள்ளன.