tamilnadu

img

தனக்கு வாக்களிக்காவிட்டால் பாவத்தை பெறுவீர்கள் என மக்களுக்கு அச்சுறுத்தல் பிரச்சாரம் செய்யும் பா.ஜ.க தலைவர்

தனக்கு வாக்களிக்காவிட்டால் பாவத்தையே பெறுவீர்கள் என மக்களிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உத்தரப்பிரதேச பா.ஜ.க தலைவர் சாக்சி மகாராஜ் தேர்தல் பிரச்சாரம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னோ நாடாளுமன்ற மக்களவை தொகுதி வேட்பாளராக பா.ஜ.க சார்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ள சாமியார் சாக்சி மகாராஜ் சர்ச்சை பேச்சுகளுக்கும், பிற்போக்கான கருத்துகளுக்கும் பெயர் போனவர். பலமுறை பலவிதமான சர்ச்சைகளை அவர் கட்டவிழ்த்து விட்டுள்ளார். அண்மையில்கூட 2019 மக்களவைத் தேர்தலில் 'மோடி சுனாமி' வெற்றி பெற்ற பின்னர் நாட்டில் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இருக்காது எனக்கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார். தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் உன்னோவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் ஒரு விநோத பேச்சை மேற்கொண்டுள்ளார்.


அப்போது அவர் பேசுகையில், ”சாஸ்திரங்கள் சன்னியாசி யாசிப்பதைக் கொடுக்க வேண்டும் எனக் கூறுவதால் சன்னியாசியான எனக்கு நீங்கள் உங்கள் வாக்குகளை அளிக்குமாறு கேட்கிறேன். அவ்வாறு எனக்கு நீங்கள் வாக்களிக்காவிட்டால் சாஸ்திரத்தின்படி உங்களுடைய புண்ணியங்கள் நீங்கி பாவத்தையே பெறுவீர்கள் என மக்களிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். பா.ஜ.க தலைவர் சாக்சி மகாராஜ் இவ்வாறு தேர்தல் பிரச்சாரம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.