அமேதி:
அமேதி தொகுதியில், காங்கிரஸ் கட்சியினர் வாக்குச்சாவடியை கைப்பற்றியதாக பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி அளித்த வீடியோ ஆதாரம், மார்பிங் செய்து தயாரிக்கப்பட்டது என அம்பலமாகி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலுள்ள வாக்குச் சாவடி ஒன்றில், 75 வயதுடைய பெண் வாக்காளரிடம் அங்கிருந்த தலைமை அதிகாரி ஒருவர், காங்கிரஸ் சின்னம் இருக்கும் இடத்தில் விரலை வைத்து வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறியதாக பாஜக-வினர் சர்ச்சை கிளப்பினர்.
அமேதி தொகுதி பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியும் இதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை வைத்தார். ட்விட்டரில் இதுதொடர்பான வீடியோ பதிவு ஒன்றையும் ஸ்மிருதி இரானி வெளியிட்டார். தேர்தல் ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஸ்மிருதி இரானியின் புகாரை விசாரித்த, தேர்தல் அதிகாரி வெங்கடேஸ்வர்லு, அந்த புகாரில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.
அந்த வாக்குச்சாவடியில் முகவர்கள் தொடங்கி அனைத்து அலுவலர்களிடமும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்றும், விசாரணையின்போது வாக்குச்சாவடி பொறுப்பு அதிகாரி வெளியில் அனுப்பப்பட்டதாகவும் வெங்கடேஸ்வர்லு தெரிவித்துள்ளார்.