லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டத்தில் செவ்வாயன்று இரவு சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டுகவிழ்ந்தது. இதுதொடர்பாக செய்தி சேகரிக்க, அமித்சர்மா என்ற ‘நியூஸ்24’ ஊடகத்தின் செய்தியாளர் அங்குசென்ற போது, அங்கிருந்த ரயில்வே போலீசார், அவரைஅடித்து உதைத்து, காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர். பின்னர், அங்கு வைத்தும் ஆடைகளைக் களைந்து தாக்கினர்.
தகவலறிந்து, சக பத்திரிகையாளர்கள் ஜிஆர்பி காவல்நிலையம் முன்பு திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அமித் சர்மா கைதுக்கு எதிராக மாநிலம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து, உ.பி. காவல்துறையின் உயர் அதிகாரிகள், தலையிட்டு புதனன்று அதிகாலை அமித் சர்மாவை விடுவித்தனர். அத்துடன் சர்மாவைத் தாக்கிய காவல்துறை அதிகாரி ராகேஷ் குமார், கான்ஸ்டபிள் சஞ்சய் பவார் ஆகியோர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கையும் எடுத்தனர்.
இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான செய்தியாளர் அமித் சர்மா, போலீசார் தன்னை கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, லாக்-அப்பில் வைத்துத் தாக்கியபோது, தனது உடைகளை களைந்து, வாயில் சிறுநீர் கழித்த தாக தெரிவித்துள்ளார். காவல்துறை பற்றி சில நாட்களுக்கு முன்பு, கட்டுரை ஒன்றை எழுதியதற்காக, திட்டமிட்ட வகையிலேயே தன்னை தாக்கியிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தை அவதூறு செய்து விட்டார்கள் என்று, சில நாட்களுக்கு முன்புதான் 3 பத்திரிகையாளர்கள் உட்பட 5 பேரை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்தனர். இதேகாலத்திலேயே,மீரட்டில், திருநங்கையரை விரட்டி விரட்டித் தாக்கி, காட்டுமிராண்டித்தனமாக உ.பி. போலீசார் நடந்து கொண்டனர். தற்போது செய்தியாளர் ஒருவரைத் தாக்கி அவரின் வாயில் சிறுநீர் கழித்து அராஜகம் செய்துள்ளனர். உ.பி. ரயில்வே காவல்துறை, மாநிலஅரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.