tamilnadu

img

மகா கூட்டணியில் பகுஜன் சமாஜ்வாதிக்கு பின்னால் நிற்க வேண்டுமானாலும் சமாஜ்வாதி தயார் - அகிலேஷ் யாதவ் உறுதி

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியில் உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ்வாதிக்கு பின்னால் நிற்க சமாஜ்வாதி தயார் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உறுதியளித்துள்ளார்.


நாடாளுமன்ற தேர்தலின் ஆறு கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் வருகின்ற 22ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. தேர்தலுக்கு முன்பே மேற்கு வங்காளத்தில் ”மகாபந்தன்” என்ற பெயரில் அனைத்து மாநிலங்களின் எதிர்க்கட்சி தலைவர்கள் மகா கூட்டணியின் மாநாட்டை நடத்தினர். உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் அம்மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க அரசிற்கு எதிராக ஓரணியில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்துள்ளன.


இன்று செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ் கூட்டணி குறித்து பேசுகையில், உத்தரப்பிரதேசத்தை பொறுத்தவரையில் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஏனெனில், தற்போதைய அரசு மட்டும்தான் தேர்தலுக்கு முன்பு கூறியதற்கு நேர் எதிராக ஆட்சி நடத்தியுள்ளது. மகா கூட்டணியை பொறுத்தவரையில் பா.ஜ.கவை வீழ்த்த பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் பின்பு 2 அடிகள் தள்ளி நிற்கவும் சமாஜ்வாதி தயங்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர் பா.ஜ.கவைப் பற்றி எந்த சிறப்பும் இல்லை. அவர்கள் நாட்டை ஏமாற்றி மட்டுமே உள்ளனர். பா.ஜ.க ஆட்சிக்கு வரும்பொழுது நாடு 35 லட்சம் கோடி கடனில் இருந்தது அது தற்போது 70 லட்சம் கோடியாக மாறியுள்ளது. அதிகரித்துள்ள 35 லட்சம் கோடி எங்கு சென்றது? என அவர் கேள்வி எழுப்பினார்.