ஊரடங்கு நீடித்த நிலையில், நாங்கள் எங்கள் பெற்றோர்களுடன் கோவாவிலிருந்து கேரளாவிற்கு சாலை வழியாகப் பயணம் மேற்கொண்டோம். இது எனக்கு முதல் அனுபவம். கேரளாவிற்குச் செல்வதற்காக இணைய தளம் மூலமாக முதலில் விண்ணப்பித்தேன். மூன்று மணி நேரத்திற்குள் அவர்களிடமிருந்து நான் ஒப்புதலைப் பெற்றுவிட்டேன். எனினும் கோவாவில், அதற்காக நான் நான்கு தடவை விண்ணப்பிக்க வேண்டி இருந்தது. பின்னர்தான் அது எனக்குக் கிடைத்தது. மேலும் இணையதளத்தின் மூலம் பெறுவதில் மிகவும் சிரமம் இருந்தது. இங்கே இதற்காக நான் சுமார் 30 மணி நேரம் செலவிட வேண்டி இருந்தது.
கோவா எல்லையில், நான் கீழே இறக்கிவிடப்பட்டேன். என்னுடையஅடையாள அட்டையையும் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின்அடையாள அட்டைகளையும் காட்ட வேண்டியிருந்தது. அதன்பின்னர் நாங்கள் செல்வதற்கு முன்பு அவற்றை ஒரு பதிவேட்டிலும் முழுமையாக எழுதிக்கொடுக்க வேண்டி இருந்தது.கர்நாடக எல்லையிலும் நாங்கள் அனைவரும் வெப்பநிலை சோதனைக்காக (thermal screening) கீழே இறங்க வேண்டியிருந்தது. அங்கேயும் எங்கள் அனைவரின் பெயர்களையும் ஒரு பதிவேட்டில்எழுதிக் கொடுத்தோம். பின்னர்தான் நாங்கள் அங்கிருந்து செல்வதற்குஅனுமதிக்கப்பட்டோம். கர்நாடகாவில் இன்றும் இரு சுங்கச் சாவடிகளில் நாங்கள் நிறுத்தப்பட்டு, அங்கேயும் எங்கள் விவரங்களை எழுதிக்கொடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்பட்டோம்.
நாங்கள் கேரளாவிற்குள் நுழைந்தவுடன், நான் கீழே இறங்கி என் அடையாள அட்டையைக் காட்டினேன். அதனைத் தொடர்ந்து எனக்கு ஒரு டோக்கன் கொடுக்கப்பட்டது. நான் மீண்டும் காருக்குள் ஏறி, சுமார் 500 மீட்டர் தூரம்தான் காரை ஓட்டியிருப்பேன். அங்கே எங்கள் அனைவரையும் இறங்கச் சொன்னார்கள். எங்கள் உணவு இருந்த பைகள்உட்பட அனைத்துப் பைகளையும் காருக்குள்ளேயே வைக்கச் சொன்னார்கள். பின்னர் காரின் கதவுகளைக் கீழே இறக்கச் சொன்னார்கள். பின்னர் கார் ஒட்டுமொத்தமாக சுத்திகரிக்கப்பட்டது (sanitised). அடுத்த முனையில் நாங்கள் சோதனை செய்யப்படும் வரையிலும் காரின் ஏசி-யைப் போட வேண்டாம் என்று எங்களைக் கேட்டுக்கொண்டார்கள். அடுத்து 500 மீட்டர் தூரத்தில் எங்களை மீண்டும் கீழே இறங்கச் சொன்னார்கள்.
இந்தத் தடவை எங்கள் அனைவருக்கும் வெப்பநிலை சோதனை மேற்கொள்ளப்பட்டது. எங்கள் அனுமதி எண் மற்றும் விவரங்கள் இணைய தளத்திலேயே சரிபார்த்தார்கள். எங்கள் ஆவணங்கள் எதையும் அவர்கள் கேட்கவே இல்லை. தொடர்பு முகவரிகளைக் குறித்துக்கொண்டபின், எங்களை அடுத்த முனை வரை செல்ல அனுமதித்தார்கள்.அந்த சமயத்தில் எங்கள் அனைவரையும் காரிலேயே உட்காரச்சொல்லிவிட்டு, காவல்துறையினர் இணைய தளம் மூலமாகவே எங்கள் விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்துகொண்டார். பின்னர் எங்கள்பயணத்தைத் தொடர அனுமதித்தார்கள். அடுத்து ஒருசில நிமிடத்தில்எங்கள் கிராமப் பஞ்சாயத்திலிருந்து எங்கள் நுழைவை உறுதிப்படுத்தி அழைப்பினைப் பெற்றோம்.
அடுத்த அழைப்பு எங்கள் கிராம சுகாதாரத் துறையிடமிருந்து வந்தது.அவர்கள் எங்கள் உடல்நிலை குறித்து விசாரித்தார்கள். மூன்றாவது அழைப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வந்தது. அவர்களும்எங்கள் உடல்நிலை குறித்து விசாரித்தார்கள். “நாம் அனைவரும் ஒருவெளிநாட்டில் இருப்பது போலவே இருக்கிறது,” என்று எங்கள் குடும்பத்தினர் அனைவருமே ஒப்புக்கொண்டார்கள். எனக்கு இன்பஅதிர்ச்சி. கேரளாவின் வரவேற்பு நடவடிக்கைகள் எங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தது. எங்கள் உடல்நலம் குறித்து ஏராளமான நிறுவனங்கள் கவலைப்பட்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் எங்கள் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தோம்.
அடுத்தநாள் காலை 7 மணியளவில், நான் மீண்டும் ஒரு அழைப்பினைப் பெற்றேன். நாங்கள் அனைவரும் வீட்டிற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்துவிட்டோமா என்று அவர்கள் கேட்டார்கள். பின்னர் வீட்டில் ஒவ்வொருவரும் 14 நாட்கள் தனித்து இருக்க வேண்டும் என்கிறஅறிவுரையை வழங்கினார்கள். ஏதேனும் நோய் அடையாளத்தை உணர்ந்தீர்களானால் உடனடியாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்கள். அடுத்து ஒன்பது மணியளவில், உள்ளூர் தொண்டர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். நாங்கள் ஊரில் இல்லாத சமயத்தில் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்ததாகவும், எங்கள் பெற்றோரை சந்தித்து, பரிசோதனை செய்ததாகவும், மேலும் ஏதேனும் தேவைகள் இருந்தால் சொல்லுமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்கள். மருத்துவ சிகிச்சை மற்றும் எந்த உதவியாக இருந்தாலும்கூப்பிடுங்கள், வந்து உதவி செய்கிறோம் என்று சொன்னதாகவும் கூறினார்கள்.
கேரளாவில் அனைத்து இடங்களிலும், எங்களுக்கு உணவுஅளிக்க முன்வந்தது எங்களை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.நாங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்வதற்கு முன்பே எங்களைப்பற்றிய விவரங்கள் அங்கே போய், அவர்கள் எங்கள் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். எங்களுக்கு உணவும், தண்ணீரும் அளித்தார்கள். மகிழ்ச்சியால் திக்குமுக்காடிப்போன நாங்கள் எங்களிடம் தேவையான அளவிற்கு உணவு கொண்டுவந்திருக்கிறோம் என்று சொல்லி, அவற்றை மறுக்க வேண்டியிருந்தது.கேரளா, ஒரு மிகச்சிறந்த நன்கு நிர்வகிக்கப்படக்கூடிய சேம நல அரசாக மாறிக்கொண்டிருக்கிறது. மாநிலத்தில் அனைவரின் சுகாதார நலன், கல்வி மற்றும் நல்ல அரசாட்சி ஆகியவற்றை மிகவும் அக்கறையுடன் பார்த்துக்கொள்ளும் மாநிலமாக கேரளம் மாறி இருக்கிறது.இது எப்படி சாத்தியமானது? என் மனதில் தோன்றியதைப் பதிவிடுகிறேன். எழுத்தறிவு, மத நல்லிணக்கம் மற்றும் பொதுமக்களும், அரசாங்க அலுவலகங்களும் ஒருவர்க்கொருவர் நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்கின்ற உண்மை. சாதனைகளுக் க்காகப் பாராட்டுகிறார்கள். தவறுகள் செய்தால் தண்டிக்கிறார்கள். எனவேதான் மக்கள் பிரதிநிதிகளும், அரசாங்க அலுவலர்களும் ஆட்சி புரிபவர்கள் போலவோ, எஜமானர்கள் போலவோ அல்லது காலனியஆட்சிக்காலத்து அதிகாரிகள் போலவோ அல்லாமல் பொதுமக்களின் ஊழியர்கள் போன்று நடந்துகொள்கிறார்கள்.
இந்தியாவின் இதர பகுதியிலுள்ளவர்களிடம் இதனை எடுத்துச்செல்ல வேண்டும். வகுப்புவாத மேலாதிக்கம் (communal supremacy), நான் பின்பற்றும் தத்துவம்தான் பெரிது என்று பீற்றிக்கொள்ளும் தத்துவார்த்தப் பெருமிதம் (ideological pride), கடந்த கால அநீதியான நடைமுறைகளை சரியென இப்போதும் நம்பி அதன்படி நடந்துகொள்ளுதல், சாதி மற்றும் மதவெறி அடிப்படையிலான தப்பெண்ணங்கள் ஆகியவற்றையெல்லாம் முழுமையாகக் கழற்றிப் போட்டுவிட்டு, அனைவருக்கும் ஒரு நல்ல, ஆரோக்கியமான, மதிப்புமிக்க வாழ்க்கைத்தரத்தை அளிக்கும் அமைப்புமுறையை கேரளா உருவாக்கிக்கொண்டிருப்பதை எடுத்துச்செல்ல வேண்டும்.
நன்றி: நேஷனல் ஹெரால்ட் / தமிழில்: ச.வீரமணி