tamilnadu

img

தீவைத்து எரிக்கப்பட்ட சிறுவன் காலித் மரணம்!

லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில், ‘ஜெய் ஸ்ரீராம்’ கூறவில்லை என்பதற்காக, தீ வைத்து எரிக்கப்பட்ட முஸ்லிம் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.அந்த சிறுவனின் உடலைக் கொண்டுசெல்வதற்கு வாகனம் கூட, ஏற்பாடு செய்து தராமல், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளன.

உத்தரப்பிரதேசத்தின் சந்தாலி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் முகம்மதுகாலித். 15 வயதேயான இந்த சிறுவனை,கடந்த சில நாட்களுக்கு முன்பு, 4 பேர்கொண்ட கும்பல் சுற்றிவளைத்து, ‘ஜெய்ஸ்ரீராம்’ கூறுமாறு மிரட்டியுள்ளது. பின்னர்,சிறுவனை இருசக்கர வாகனத்தில் கடத்தி, ஹாதீஜா என்ற கிராமத்திற்கு கொண்டு சென்று, அங்கு உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துள்ளது.இதில் உடல் முழுவதும் வெந்துபோன அந்தச் சிறுவன் 60 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டான். அங்கு, ‘ஜெய்ஸ்ரீராம்’ கூறுமாறு மிரட்டிய 4 பேர் கொண்டகும்பல்தான், தன்னை தீயிட்டு எரித்துக்கொலைசெய்ய முயன்றது என்று வாக்குமூலம் அளித்தான்.ஆனால், உத்தரப்பிரதேச பாஜக காவல்துறை ஏற்கவில்லை.“சிறுவன் முரண்பட்ட வகையில் பேசுவதாகவும், உண்மையில் அவனுக்கு யாரும் தீவைக்கவில்லை; மாறாக, அவனே தீயிட்டுக் கொண்டான்; ‘ஜெய்ஸ்ரீராம்’ முழக்கத்திற்கும் தீவைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று ஆதித்யநாத்தின் காவல்துறை தீர்ப்பு எழுதியது.

இந்நிலையில்தான், சம்பந்தப்பட்ட சிறுவன் காலித், செவ்வாயன்று இரவு,சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலித் குடும்பத்தினர்மட்டுமின்றி, மனித உரிமைச் செயற்பாட்டா
ளர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதனிடையே, சிறுவனின் உடலைக் கொண்டு செல்வதற்கான வாகன வசதியைக் கூட, மருத்துவமனை நிர்வாகம் ஏற்படுத்தித் தரவில்லை என்றதகவல் வெளியாகியுள்ளது. காலித்தின் உடலை, அவரது தந்தை, ஒரு சரக்குவாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.காலித் இறந்து விட்ட நிலையிலும், தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளாத உத்தரப்பிரதேச பாஜக அரசின் காவல்துறையானது, காலித்தின் குடும்பத்தினர், நடக்காத ஒரு கதையைஜோடித்து, தங்களின் மகன் எரித்துக்கொல்லப்பட்டதாக பொய் சொல்வதாகவும், இதற்காக அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்
டல் விடுத்துள்ளனர்.