அலகாபாத்:
அமித் ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய, மாணவி நேகா யாதவை, இடைநீக்கம் செய்து, அலகாபாத் பல்கலைக்கழக நிர்வாகம் பழிவாங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அலகாபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் மாணவி நேகா யாதவ். அரசியல் ஆர்வம் கொண்ட இவர், மாணவர் தொடர்பான விஷயங்களில் போராட்டங்களை நடத்தி வருபவர் ஆவார்.
அந்த அடிப்படையில், உத்தரப்பிர தேச மாநில பாஜக அரசு, மாணவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு வருவதாகக் கூறி, கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் போராட்டம் நடத்தினார். அப்போது, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் கான்வாய் வாகனத்தை மறித்து கறுப்புக் கொடி காண்பித்தார். அமித்ஷா, மோடி, ஆதித்யநாத் மற்றும் பாஜக-வுக்கு எதிராக முழக்கங்களையும் அப்போது நேகா எழுப்பினார்.
இதற்காக வழக்கு பதிவுசெய்த போலீசார், நேகாவை கைது செய்தனர். பல்கலைக்கழக நிர்வாகமும் நேகா மீது குறிவைத்தது.நேகாவுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கல்வியாண்டு முடிந்ததும் உடனடியாக பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தர விட்டது. தேர்வுகளுக்கு படிக்க வேண்டியுள்ள நிலையில், தங்களை வெளியேறச் சொல்வது சரியல்ல என்று மாணவ- மாணவியர் எவ்வளவோ கூறியும் கேட்கவில்லை. இவ்விஷயத்திலும் நேகா யாதவ், மாணவ - மாணவியரைத் திரட்டி போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
இந்நிலையிலேயே, பல்கலைக்கழக நிர்வாகமானது, நேகா யாதவை, தற்போது பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது. விடுதி யிலிருந்தும் வெளியேற்றியுள்ளது. பல்கலைக்கழக தலைவரும், மாணவர் நல அதிகாரியும் அடுக்கடுக்காக அளித்த புகார்களின் பேரில் நேகா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் காரணம் கூறியுள்ளது.
ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுக் களை நேகா யாதவ் மறுத்துள்ளார்.
“பல்கலைக்கழகத்தில் ஒழுங்கீன மாக நடந்துகொண்டதால், என்னை இடைநீக்கம் செய்துள்ளதாக கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல. மாண வர் நலனுக்காகப் போராடி வருவதாலேயே, என் மீது இட்டுக்கட்டி பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தியுள்ளனர். இன்னும் குறிப்பாகச் சொன்னால், அமித் ஷாவுக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டிய பின்தான் என்னைக் குறிவைத்து பழிவாங்குகிறார்கள்” என்று நேகா யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் நுழைவுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, அதனடிப்படையிலேயே பல்கலைக் கழகத்தில் சேர்ந்துள்ளேன். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகத்திலுள்ள சிலர் எனது முன்னேற்றத்தைத் தடுக்க முயலுகின்றனர். நான் இங்குள்ள முறை கேடுகளை எதிர்ப்பதே அதற்குக் கார ணம்” என்றும் நேகா குறிப்பிட்டுள்ளார்.“எதிர்காலத்தில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று நேகா உறுதி அளித்தால் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய தயார்” என்று பல்கலைக்கழகம் கூறியுள்ள நிலையில்,எந்த தவறும் செய்யாத நான் உறுதி யளிக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டிருக்கும் நேகா, இவ்விஷயத்தை நீதிமன்றம் மூலம் எதிர்கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார்.