1303 - எட்டு மாத முற்றுகைக்குப்பின், சித்தூர்கார் என்ற (கார் என்றால் கோட்டை), சித்தூர் கோட்டையை டெல்லி சுல்தான் அலாவுதீன் கல்ஜி(Khalji) கைப்பற்றினார். பத்மாவதி என்று குறிப்பிடப்படும் சித்தூர் ராணி பத்மினியின் அழகில் மயங்கி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கதைகளில் குறிப்பிடப்பட்டாலும், உண்மையான காரணம்பற்றிய வரலாற்றுப் பதிவுகள் எதுவும் இல்லை. டெல்லி சுல்தானகத்தை உருவாக்கிய ஜலாலுதீனின் அண்ணன் மகன் அலாவுதீன் கல்ஜி. சித்ராங்கட மவுரியர் என்ற மவுரிய அரசரால் கட்டப்பட்டு, அவர் பெயரால் சித்திரகூட் என்று பெயரிடப்பட்ட இந்தக் கோட்டையை 720களின் இறுதியில் குகிலா மரபினர் கைப்பற்றி, சித்தூரைத் தலைநகராகக்கொண்டு மேவாரை ஆண்டுகொண்டிருந்தனர்.
1301இல், சித்தூருக்கும் டெல்லிக்கும் இடையிலிருந்த ரத்தம்பூரை அலாவுதீன் கல்ஜி கைப்பற்றியதைத் தொடர்ந்து, விரிவாக்க நடவடிக்கையாகவே, மேவார்மீது போர் தொடுத்திருக்கவேண்டும். 1303 ஜனவரியில் சித்தூரை கல்ஜி முற்றுகையிட்டாலும் எட்டு மாதங்கள் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. உணவுப் பற்றாக்குறையாலோ, அல்லது தொற்றுநோய் எதுவும் பரவியோ, கோட்டைக்குள்ளிருந்தோர் உயிரிழந்து பலவீனப்பட்டதால் கோட்டை வீழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 1301இல்தான் முடிசூடியிருந்த ராணா ரத்னசிம்மாவின் (ரத்தன்சிங் என்றும் குறிப்பிடப்படுகிறார்) மனைவியான ராணி பத்மினி பற்றிய குறிப்புகள் எதுவும் இப்படையெடுப்பைப் பற்றிய தொடக்ககாலப் பதிவுகளில் இல்லை. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூஃபி பாடல் ஒன்றுதான் முதன்முதலில் பத்மாவதி தீக்குளிப்பு பற்றிக் குறிப்பிடுகிறது. இஸ்லாத்தின் வழிபாட்டு முறைகளில் ஒன்றான சூஃபி என்பது பாடல்களால் வழிபடுவதாகும்.
இப்பாடல்களை ஏராளமான சூஃபி கவிஞர்கள், உள்ளூர் கதைகளுடன் எழுதியுள்ளனர். ரத்தன்சிம்மாவின் முடிவுகுறித்தும் உறுதியான தகவல்கள் இல்லை. கல்ஜியால் மன்னித்து விடுவிக்கப்பட்டதாகவும், மோதலில் கொல்லப்பட்டதாகவும் மாறுபட்ட தகவல்கள் உள்ளன. இத்துடன் குகிலா மரபின் ஆட்சி முடிவுக்குவந்துவிட, அடுத்துவந்த ராஜபுத்திரர்களின் சைசோதியா மரபு ஆட்சியில், 1535இல் குஜராத் சுல்தான் பகதூர்ஷா படையெடுத்தபோது ராணி கர்ணாவதி தலைமையில் ஒரு கூட்டுத்தற்கொலையும், 1567இல் அக்பர் படையெடுத்தபோது ஒரு கூட்டுத்தற்கொலையும் இதே சித்தூர்கோட்டையில் நடந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவின் வேறு பகுதிகளிலும் நடைபெற்றுள்ள இந்தக் கூட்டுத்தற்கொலை, கிரேக்கப் படையெடுப்பு காலத்திலேயே நடந்திருந்தாலும், பிற இந்து அரசர்களின் படையெடுப்பின்போது நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.