தூத்துக்குடி:
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . இதையடுத்து, காயல்பட்டினம் அரசு மருத்துவமனை கடந்த 4-ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த 9-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் சந்திப் நந்தூரி செய்தியாளா்களிடம் கூறும்போது, மருத்துவமனை ஏப். 11 (சனிக்கிழமை ) முதல் இயங்கும் என தெரிவித்தார் . இதையடுத்து, மருத்துவமனையில் தொடா்ந்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மருத்துவமனையில் உள்ள அனைத்து உபகரணங்களையும் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை சுத்தப்படுத்தினா். இதனை தூத்துக்குடி துணை இயக்குநா் பொன் இசக்கி, அரசு மருத்துவக் கல்லூரி சமூக நலன் மற்றும் நோய்த் தடுப்புப் பிரிவு உதவிப் பேராசிரியா் சபீதா ஆகியோர் ஆய்வு செய்தனா்.
இதனிடையே, வைரஸ் தொற்று ஏதாவது ஒரு பகுதியில் இருந்து அதன்மூலம் யாருக்காவது பரவிவிடக்கூடாது, இன்னும் கூடுதலாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என ஆய்வு செய்ய வந்த மருத்துவ குழுவினா் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, . மீண்டும் சுகாதாரத் துறையினா் ஆய்வு செய்த பிறகே மருத்துவமனை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.