தூத்துக்குடி:
விவசாய கடன் மோசடியில் ஈடுபட்டகிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சுப்பையா, மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் சிங்கத்தாகுறிச்சி கிராம விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள், ஆட்சியரிடம் அளித்துள்ள மனு :
தமிழ்நாடு அரசு நீண்டகால விவசாய பயிர்க் கடன் பெற்றிருந்த விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் தாலுகா சிங்கத்தாகுறிச்சி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்வங்கியில் சிங்கத்தாகுறிச்சி, காசிலிங்கபுரம், ஆலந்தா, சவலாப்பேரி ஆகிய கிராமங்களை சார்ந்த சிறு குறுவிவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தமிழக அரசு கடன் தள்ளுபடி கிடைக்கச் செய்யாமல் விவசாய கடன் மீது நகைக்கடனும், நகைக்கடன் மீது விவசாயக்கடனும் என மாற்றி வைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் உண்மைக்குப் புறம்பான 10(1) அடங்கல் மற்றும் இதர சான்றுகளை பெற்றுக்கொண்டு மேற்படி வங்கியில் தலைவர் மற்றும் செயலாளர் இவர்களுடன், இவர்களுக்கு வேண்டிய சில நபர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி என கூறி பல லட்ச ரூபாயை மோசடியாக பெற்றிருக்கிறார்கள்.
போலிபயனாளிகள்
மேற்படி வங்கியில் விவசாயத்திற்கு கடன் கேட்டு பல விவசாயிகள் விண்ணப்பம் செய்துள்ளார்கள். விண்ணப்பத்தின் மீது கடன் கிடைக்கும் என நம்பி பல நாட்கள், சில மாதங்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், வங்கியில் பணம் இல்லை என காலம் தாழ்த்திவிட்டு, விவசாயம் செய்யாத நிலங்களுக்கும், விவசாயம் நடைபெறாத நிலங்களுக்கும், விவசாயம் நடைபெற்றதாகவும், போலி பயனாளிகளுக்கு கடன் அட்டை வழங்கியகிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்திட வேண்டும் என விவசாயி
கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.