மயிலாடுதுறை, ஜூலை 12- நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஏவிசி கல்லூரியில் தமிழாய்வுத் துறை, நாட்டு நலப் பணித் திட்டம், அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, கல்லூரி கல்வி இயக்ககம் ஆகியவை சார்பில் உலக மக்கள் தொகை தினப் போட்டி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் இரா.நாகராஜன் தலைமை வகித்து பேசினார். தமிழாய்வுத் துறைத் தலைவர் டாக்டர் சு.தமிழ்வேலு, வணிகவியல் துறைத் தலைவர் டாக்டர் மா.மதிவாணன், பொருளாதாரத் துறைத் தலைவர் டாக்டர் இரா.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் கி.கார்த்திகேயன், பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். முன்னதாக பேராசிரியர் ம.மோ.கீதா வரவேற்றார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் டாக்டர் ஜி.கார்த்திகேயன் நன்றி கூறினார். இதன் ஒரு பகுதியாக கடந்த 10-ம் தேதி கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.