அரசு உத்தரவை மீறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, மே 6-சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர் சம்பத் மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் துணை ஆணையர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டத்தில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையமும், மாவட்ட ஆட்சியரும் பல்வேறு முயற்சிகள் எடுத்து, பிரச்சாரம் செய்யப் பட்டது.ஆனால் மாவட்டத்தில் பெரும் வணிக நிறுவனங்களும், ஜவுளி கடைகளும் பல கம்பெனிகளும் ஊழியர்களுக்கு அரசு அறிவித்த விடுமுறைகளை அளிக்காததால் ஊழியர்கள் வாக்களிக்க முடியாமல் போனார்கள். அதே போல்மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்திற்கும் அரசு விடுமுறைஅளித்தும் இவர்கள் விடுமுறை அளிக்கவில்லை. எனவேஅப்படி வேலை வாங்கிய நிறுவனங்கள், அந்த ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் சட்டப்படி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் சட்ட விதிமுறைகளின் படி செயல்படாத கடைகள், வணிக நிறுவனங்கள், பெரும் ஜவுளி கடைகள், உணவுநிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் போன்ற அரசின் உத்தரவை மீறி செயல்பட்ட முரண்பாடுகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் பந்தலில் குவளைகளை எடுத்துச் சென்ற காவலர் பணியிட மாற்றம்
புதுக்கோட்டை, மே 6-புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு பள்ளிவாசல் இளைஞர்களின் முயற்சியால் கோடை வெயிலில் தாகம் தீர்க்க அப்பகுதியில் தண்ணீர் பந்தல்அமைத்துள்ளனர். அந்த பானையில் தண்ணீர் குடிக்க சில குவளைகளும் வைக்கப்பட்டிருந்தன. இதில், 10 க்கும் மேற்பட்ட குவளைகளை காணவில்லை. அதே போல 4-ஆம் தேதி காலையும் வழக்கம் போல குவளையை காணவில்லை. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை இளைஞர்கள் ஆய்வு செய்த போது, அந்த குவளையை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரே எடுத்துச் செல்வது தெரியவந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை எற்படுத்தியது.இதில் தண்ணீர் பந்தலில் இருந்த குவளையை எடுத்துச் சென்றது கீரமங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த ஏட்டு அய்யப்பன் மற்றும் ஊர்காவல் படையை சேர்ந்த வடிவழகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஏட்டு அய்யப்பனை ஆயுதப்படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். மேலும் ஊர்காவல் படை வடிவழகன் மீது விசாரணை நடந்து வருகிறது.