தஞ்சாவூர் ஏப்.30-காரைக்குடி- திருவாரூர் மார்க்கத்தில் அகல ரயில் பாதை பணிகளுக்காக கடந்த 2012ஆம் ஆண்டு இவ்வழியாக இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 7 ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை முறையாக ரயில் சேவை தொடங்கப்படாததால் இப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் பேராவூரணி நிலையத்தில் ரயில் சேவை இயக்கப்படாததால் அதிகாரிகள் வராமல் அலுவலகங்கள் பூட்டிக் கிடக்கின்றன. அலுவலக கண்ணாடிகள் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட மின்விசிறிகள் கஜா புயலில் சேதமடைந்த நிலையில் சீரமைக்கப்படாமல் வளைந்தும் நெளிந்தும் தொங்குகின்றன.இதுகுறித்து பேராவூரணி வட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் ஏ.மெய்ஞானமூர்த்தி, ஏ.கே.பழனிவேல் உள்ளிட்டோர் கூறுகையில், "ரயில்வே நிர்வாகம் உடனடியாக காரைக்குடி- திருவாரூர் வரை அகல ரயில் பாதை பணி முடிந்து, சோதனை ஓட்டமும் நிறைவு பெற்றிருப்பதால், இவ்வழித் தடத்தில் தினசரி ரயிலை இயக்க வேண்டும். அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சென்னை மற்றும் வெளியூர்களுக்கு செல்வதற்கு கணினி முன்பதிவு மையம் அமைப்பதோடு, பர்த் வசதி எண்ணிக்கை விபரத்தை தெரியப்படுத்த வேண்டும். உடனடியாக ரயிலை இயக்க வேண்டும். இல்லையேல் மக்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தும் சூழ்நிலை ஏற்படும் என்றனர். தென்னக ரயில்வே பணிகள் முடிந்த இந்த வழித்தடத்தில் உடனடியாக போதிய அலுவலர்கள் பணியாளர்களை நியமிப்பதோடு, மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரயில் சேவையை விரைந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.