கரூர், ஏப்.16-கரூரில் அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரை மற்றும் திமுக கூட்டணிகாங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி ஆகியோரின் இறுதிக்கட்ட பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக இரு கட்சிவேட்பாளர்களும் ஒரே நேரத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொள்ள கரூர் பேருந்துநிலைய ரவுண்டானாஅருகே இடம் கேட்டனர். இதற்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த.அன்பழகன் இரு கட்சி வேட்பாளர்களுக்கும் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொள்ள தடை விதித்தார். இதனால் இருகட்சியினருக்கும் கரூர்வெங்கமேட்டில் அனுமதிக் கொடுக் கப்பட்டது.இதில் அதிமுகவினர் வெங்கமேட்டில் உள்ள எம்ஜிஆர், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு அங்கிருந்து ஊர்வலமாக சர்ச் கார்னர், ஜவஹர்பஜார், சின்னஆண்டாங் கோயில், பெரியார்வளைவு, சேலம்பைபாஸ் சாலை, திருக்காம்புலியூர்ரவுண்டானா வழியாக கோவைச் சாலையில் உள்ள அதிமுக பணிமனையில் முடிவடையும் வகையிலும், திமுக கூட்டணியில் உள்ளகாங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு வெங்மேடு காமராஜர் சிலையில் பிரசாரத்தை துவக்கி, சர்ச் கார்னர், பழையதிண்டுக்கல் சாலை, அமராவதி பாலம், சுங்ககேட், தாந்தோணிமலையில் முடிவடையும் வகையில் பிரச்சாரத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது.இதையடுத்து திமுகவினரும், காங்கிரஸ் கட்சியினரும் வெங்கமேடு காமராஜர் சிலை அருகே பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பிரசாரத்தில் திருச்சி சிவா எம்பி, வேட்பாளர் செ.ஜோதிமணி, திமுகமாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் பிரச்சாரத்தைமுடித்துக் கொண்டு தாந்தோணிமலை நோக்கி புறப்பட்டனர். அப் போது அவரது ஆதரவாளர்களும் பின்னால் சென்றனர். இதில் ஒரு பகுதியினர் காமராஜர் சிலை முன் நின்று கொண்டிருந்தனர். அப்போது அதிமுகவினரும் தங்களது பிரசார ஊர்வலத்தை தொடங்கி வெங்மேடு எம்ஜிஆர் சிலை பகுதியில் இருந்து புறப்பட்டனர்.
இதனிடையே காமராஜர் சிலைமுன் நின்றுகொண்டிருந்த திமுகவினருக்கும், அங்கு வந்த அதிமுகவினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் கம்புகளாலும், கற்களாலும் தாக்கிக்கொண்டனர். அப்போது தடுக்க வந்த வெங்மேடு காவல்நிலைய உளவுப்பிரிவு ஏட்டுசெந்திலுக்கும், அதிமுக வார்டு செயலாளர் தர்மனுக்கும் அடிவிழுந்தது.இதில் இருவரது மண்டையும்உடைந்து ரத்தம் கொட்டியது. இதனைக்கண்ட அப்பகுதியினர் இருவரையும் இருசக்கரவாகனத்தில் ஏற்றி கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கலவரத்தின்போது ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டபோது அங்கு நின்றுகொண்டிருந்த இரு கர்ப்பிணி பெண்களும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அங்கு வந்த நகர காவல் துணைகண்காணிப்பாளர் கும்மராஜா தலைமையிலான போலீஸார் இருதரப்பினரையும் சமாதானம்செய்து அனுப்பி வைத்தனர். இந் நிலையில் கர்ப்பிணி பெண்கள் காயமடைந்த தகவல் அறிந்ததும் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்களும், திமுகவினரும் வெங்கமேடு பழைய திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் அவர்களை சமாதனம் செய்து கலைத்தனர்.
கலவரம் வருவதற்கு முழுக்காரணம் போலீஸாரின் கவனக்குறைவுதான். அதிமுக, திமுக கூட்டணியினர்தேர்தல் பிரச்சாரம் நடத்த அனுமதி கேட்டிருந்த கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில்தான் துணைராணுவப்படையினரையும், அதிகளவில் வெளிமாவட்ட போலீஸாரையும் குவித்திருந்தனர். ஆனால் ஏற்கனவேஇருகட்சிகளுக்கும் இடையே வார்த்தை மோதலால் வெடித்துக் கொண்டிருந்த அவர்களிடையே இறுதி பிரச்சாரம் செய்யும் போது ஒரேஇடத்தில் பிரச்சாரத்திற்கு அனுமதிஅளித்தால் நிச்சயம் மோதல் ஏற்படும் என அனைத்து பத்திரிகைகளும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நேரத்தில், வெங்கமேட்டில் அருகருகே இருகட்சிகளுக்கும் அனுமதி அளித்துள்ளது காவல்துறை.ஏற்கனவே வேட்புமனு தாக்கலின்போது இரு கட்சியினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அப்போதும் காவல்துறையினர் கைகட்டிக் கொண்டு வேடிக்கை தான்பார்த்தது. இந்நிலையில் கலவரம் ஏற்படும் என தெரிந்தே ஒரே இடத்தில்வெங்கமேட்டில் இருகட்சி வேட்பாளர்களுக்கும் பிரச்சாரத்தை துவங்கும் இடமாக வழங்கியுள்ளனர். மேலும் பிரசாரம் துவங்கும் இடத்தில் நகர துணைக்காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா தலைமையில் சுமார் 10 போலீஸார் மட்டுமே காவல் பணியில் ஈடுபட்டனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த இடத்தில்கலவரம் ஏற்பட்ட போது, அவர்களால்அதை தடுக்க முடியவில்லை. போலீஸாரின் உரிய பாதுகாப்பின்மை தான்கலவரத்திற்கு காரணம் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.