tamilnadu

img

சுஜித் : வருவாய் ஆணையர் உறுதி

மழையையும் பொருட்படுத்தாமல் மீட்புக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையுடன் பணியை தொடர்கின்றனர். இதனிடையே, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மழையில் நனைந்தபடியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, துளையிடுவதற்கு ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து மீட்பு பணி நடைபெறும் என்றும் கூறினார்.“துளையிடும் பணி திருப்தி தரும் வகையில் இல்லை. கடினமான பாறைகள் நிறைந்த பகுதியாக இருப்பதால் மீட்பு பணி கடும் சவாலாக உள்ளது. குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். மீட்பு பணி குறித்து மனோதத்துவ நிபுணர்கள் மூலம், பெற்றோரிடம் விளக்கி கூறப்படும். மீட்பு பணி தொடர்பாக தவறான நம்பிக்கையை ஊட்டக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம்.ஆழ்துளை கிணற்றில் குழந்தை தற்போது 88 அடியில் இருக்கிறது. குழந்தை தொடர்ந்து கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது 40 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது. 98 அடி வரை குழி தோண்டும் பணி நடைபெறும். எந்த சூழ்நிலையிலும் மீட்பு பணிக்காக குழி தோண்டும் பணி நிறுத்தப்படமாட்டாது. குழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணம் கொண்டும் பாதியிலேயே கைவிடப்பட மாட்டாது. மழை பெய்தாலும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறும். தொழில்முறை பொறியாளர்களின் ஆலோசனைகளை கேட்டு அதன்படி முயற்சிகள் செய்து வருகிறோம். முழுமையாக பள்ளம் தோண்ட 12 மணி நேரம்வரை ஆகும். இன்னும் ஆழமாக தோண்டும்போது கரிசல் மண் தென்பட வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். எனவே பள்ளம் தோண்டும் பணி தொடரும். தொழில்முறையில் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதைத்தான் செய்கிறோம். மீட்பு பணிக்கு ஆகும் செலவை அரசே ஏற்கும்” என்று ராதாகிருஷ்ணன் கூறினார். (ந.நி.)