tamilnadu

img

கேரள அரசு ஊழியர் ஓய்வூதியர்களுக்கு ரூ.6 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு

திருவனந்தபுரம், ஏப்.27-கேரள மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ரூ.6 லட்சம் வரை சிகிச்சை பெறஉதவும் மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜுன் முதல் தேதியிலிருந்து மெடிக்கல் இன்சூரன்ஸ் ஸ்கீம் பார் ஸ்டேட் எம்பிளாயீஸ் அன்டு பென்சனர்ஸ் (மெடிசெப்) என்கிற பெயரில் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. கேரள அரசின் மெடிக்கல் அட்டன்டன்ட் சட்டங்களுக்கு உட்பட்ட உயர்நீதிமன்றம் உள்ளிட்டமாநில அரசு ஊழியர்கள், பகுதிநேரஊழியர்கள், அரசு நிதிஉதவி பெறும் கல்வி நிலைய ஆசிரியர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், உள்ளாட்சிஊழியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், தனி அலுவலர்கள், இதற்குட்பட்ட ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாவர். இவர்களுடன் வசிப்போரும் பயனடையலாம்.

3 வருடங்களுக்கு பயன் 

திட்டத்தின் ஆயுள் காலமான 3ஆண்டுகள் 3 பிரிவுகளின்கீழ் சிகிச்சை பெறலாம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.2 லட்சத்துக்கான அடிப்படை சிகிச்சைகள் கிடைக்கும். உடல் உறுப்பு மாற்றம் போன்றதீவிர சிகிச்சைக்கு ஒரு குடும்பத்திற்கு 3 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் வரை அதிகபட்சமாக பெற முடியும். ஒவ்வொரு ஆண்டும் பெறும் ரூ.2 லட்சத்துக்கான அடிப்படை மருத்துவ சிகிச்சை அல்லாமல் கூடுதலாக இத்தொகையை பெற முடியும். கூடுதல் பாதுகாப்புடன் தீவிர நோய்க்கான சிகிச்சைக்கு இந்த தொகை போதுமானதாக இல்லையென்றால், அதற்கு மேலும் பாலிசி கால அளவில் அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வரை வழங்கப்படும். இதற்காக காப்பீட்டு நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.25 கோடி மதிப்பிலான ஒரு தொகுப்பு நிதியை ஏற்படுத்தும். 

பிரிமியம் ரூ.250

2017-18 பட்ஜெட் உரையில்மெடிசெப் திட்டம் அறிவிக்கப்பட்டது. காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் விருப்ப பத்திரங்களை பெற்ற இ-டெண்டர் பிறப்பித்து நிறுவனத்தை இறுதிப்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. டெண்டரில் கூறப்பட்டிருந்த மிக குறைந்த வருடாந்திர பிரிமிய தொகையாக ரூ.2992.48 (ஜிஎஸ்டி உட்பட) குறிப்பிட்டிருந்த ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.250பிரிமியமாக பிடித்தம் செய்யப்படும். ஓய்வூதியதாரர்களுக்கு மெடிக்கல் அலவன்ஸாக வழங்கப்படும் ரூ.300லிருந்து பிரிமியதொகை பிடித்தம் செய்யப்படும். கம்பெனிக்கான பிரிமிய தொகையை மூன்று தவணைகளாக அரசு செலுத்தும். புற நோயாளிகளுக்கான சிகிச்சைக்கு தற்போது நடைமுறையில் உள்ள மெடிக்கல் ரீ-இம்பேழ்ஸ்மென்ட் திட்டம் தொடரும். அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அரசு வழங்கிய மிக முக்கியமான வாக்குறுதி இதன் மூலம் செயல்பாட்டுக்கு வருகிறது.