tamilnadu

img

சொத்து வரி உயர்வு தொடரும் குளறுபடிகள்

கடந்த 2018 ஏப்ரல் மாதம் தமிழகமெங்கும் சொத்துவரி சீராய்வு செய்வதற்கான அனுமதியை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கியிருப்பதாக தமிழக அரசு அறிவிப்பு செய்தது. அத்துடன் வீட்டு உரிமையாளர்களிடமிருந்து அவர்களின் வீடு பற்றிய தகவல்களை பெற்று, நிலுவையில் இருக்கும் வழிமுறைகளின் அடிப்படையில் வரி உயர்த்திட உத்தரவிட்டது. சென்னை மாநகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக வீட்டுவரி உயர்த்தப்படாமல் இருப்பதையும் மற்ற உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த பத்தாண்டுகளாக உயர்த்தப்படாமல் இருப்பதையும் கணக்கில் கொண்டு இந்த உயர்வானது குடியிருப்பு வீடுகளுக்கு 50 சதவீதத்திற்கு மிகாமலும் வாடகை வீடுகளுக்கு 100 சதவீதத்திற்கு மிகாமலும் பார்த்துக் கொள்ளும்படி உத்தரவிட்டதாக கூறியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த அறிவிப்பை கடுமையாக எதிர்த்தது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலைவாசிகள் உயர்ந்துவரும் நிலையில், வீட்டுவரி உயர்வு மக்கள் மீது தாங்கொண்ணாச் சுமையை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டி, உயர்வை உடனடியாக கைவிடவேண்டும் என்று வலியுறுத்தியது. அத்துடன் உள்ளாட்சித்தேர்தல் நடத்தாத நிலையில், உள்ளாட்சி மன்றங்களில் விவாதிக்காமல் முடிவு எடுப்பது ஜனநாயக விரோதம் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியது. அரசு தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யாமல் கடந்த 19.07.2018 அன்று அரசாணை எண் 73 வாயிலாக வெளியிட்டது. இடையில் வாடகை வீடுகளுக்கு ஏற்படும் உயர்வை வாடகை உயர்வுமூலமாக வீட்டு உரிமையாளர்கள் குடியிருப்போரிடமே கொண்டு செல்வதால் குடியிருப்பு வீடுகளுக்கும் வாடகைவீடுகளுக்கும் ஒரேமாதிரியான உயர்வு வேண்டும் என்று ஒரு பொதுநல மனு தாக்கலானது. இப்பொதுநல மனுவிற்கு பதிலளித்த அரசாங்கம்கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக கூறி தங்களுடைய அரசாணையை திருத்தி புதிய அரசாணை எண் 76ஐ 26.07.2018 அன்று வெளியிட்டது. பொதுமக்கள் இவ்வுயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கையெழுத்து இயக்கங்களும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். பல இடங்களில் இந்த இயக்கங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி தலைமை தாங்கியது. குறிப்பாக பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் நடத்திய இயக்கங்களை மார்க்சிஸ்ட் கட்சி முன்னின்று நடத்தியது. 

ஏழைக்கும் பணமுதலைக்கும் சம வரி! 

உலகமயமாக்கல் கொள்கை அமலுக்கு வந்தபின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி பங்கீடு என்பது நியாயமான முறையில் நடைபெறவில்லை. எல்லாவற்றையும் ‘‘உபயோகிப்பாளர் கட்டணம் செலுத்து’’ (User pay) என்ற கருத்தே உலகமயமாக்கலின் அடிப்படை தாரக மந்திரமாகும். மக்கள் அனைவருக்கும் சொந்தமான பொது வளங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டு ‘‘உபயோகிப்பாளர் கட்டணம் செலுத்து’’ கொள்கை புகுத்தப்பட்டது. கோடீஸ்வர அம்பானியையும், அன்றாடங்காய்ச்சியான ஒரு தொழிலாளியையும் வெறும் உபயோகிப்பாளராக கருதி இருவருக்கும் சம வரியே விதிக்கப்பட்டது. 

இன்னொருபுறம் வளர்ந்துவரும் குடியிருப்புத் தேவையும் அதையொட்டி வளர்த்தெடுக்கப்பட வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதி ஒதுக்கீடும் குறைய ஆரம்பித்தது, இதிலும் தனியார் மயம் வந்தது. உள்கட்டமைப்பை மேம்படுத்தவேண்டிய கட்டாயத்திலிருக்கிற உள்ளாட்சி அமைப்புகள் உலக வங்கிக் கடனை நாடிச் சென்றன. உலக வங்கியோ திருப்பிச் செலுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டே கடன் தொகையை தீர்மானித்தது. திருப்பிச் செலுத்தும் திறனோ உள்ளாட்சி அமைப்புகளின் சொத்துவரி வசூல் உள்ளிட்ட வருமானத்தின் அடிப்படையில் அமைவதால் சொத்துவரி ஏராளமாக வசூலாவதற்கான வாய்ப்பிருப்பதாக புத்தகத்தில் ஏற்றி அதன் அடிப்படையில் கடன்களை பெற்று உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றி வந்தனர். 

இது ஒரு கட்டத்தில் நெருக்கடிக்கு இட்டுச் சென்றது. இப்போக்கு தமிழகத்திற்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் பொதுவான போக்காகவே இருக்கிறது. நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு கடுமையான வரி உயர்வை செய்யும் ஆலோசனையை அதிகாரிகள் மட்டத்திலும் கடன் கொடுத்த உலக வங்கி மட்டத்திலும் கூறப்பட்டு வந்தது. உலகமயமாக்கல் கொள்கைகளை கடுமையாக எதிர்த்து வந்த மார்க்சிஸ்ட் கட்சி, இது போன்ற அணுகுமுறை நெருக்கடிக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரித்து வந்தது. இதன் ஒரு அங்கமாகவே இந்த வரி உயர்வு செய்யப்பட்டிருக்கிறது என்பதை மார்க்சிஸ்ட் கட்சி பதிவு செய்ய விரும்புகிறது. 

ஏராளமான குளறுபடிகள்

உரிமையாளர்களிடமிருந்து தகவல்கள் பெறும் படிவத்தைப் பெற்று அக்டோபர் மாதத்தில் ஒவ்வொரு வீட்டு உரிமையாளர்களுக்கும் வரி உயர்வு எவ்வளவு எனக் கணக்கிட்டு சில வீடுகளுக்கு சீராய்வு நோட்டீஸை நேரடியாக கொடுத்தனர். சிலருக்கு சீராய்வு நோட்டீஸை கொடுக்கக்கூட இல்லை. சொத்துவரி சீராய்வின் மூலமாக கணிசமான பகுதியினருக்கு உயர் நீதிமன்றத்தில் அவர்கள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலும் அவர்கள் வெளியிட்ட அரசாணை எண் 76ன் அடிப்படையிலும் அது 50 சதவீதத்திற்குள் நிறுத்தவில்லை; அது சில இடங்களில் 700 சதவீதத்தை தொட்டிருக்கிறது. எந்தவித விஞ்ஞானப் பூர்வமான அணுகுமுறையும் இல்லாமல் மானாவாரியாக உயர்வு அமலாக்கப்பட்டிருக்கிறது. செய்யப்பட்ட உயர்வில் ஏராளமான குளறுபடிகள் இருக்கின்றன. 

அடிப்படை தெரு மதிப்பு (க்ஷயளiஉ ளுவசநநவ சுயவந) அடிப்படையில் கணக்கிட்டதாக கூறப்படுகிறது. ஒரு தெருவிற்கு அடிப்படை தெரு மதிப்பை அறிவித்து அத்தெருவில் உள்ள எல்லா வீடுகளுக்கும் அம்மதிப்பின் அடிப்படையிலேயே சொத்துவரியை நிர்ணயித்திருக்கிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினராக இருந்தாலும்அவர்களுக்கும் அதிக வருமானம் உள்ளவர்களுக்கும் ஒரே வரி. இந்த அணுகுமுறையை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்ளாது. பழைய கட்டிடத்திற்கும் புதிய கட்டிடத்திற்கும் ஒரே வரி. இதையும் மார்க்சிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்ளாது. பின்தங்கிய பகுதிக்கான அடிப்படை தெரு மதிப்பானது வளர்ச்சியடைந்த பகுதியைவிட அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. (உதாரணத்தை சொல்ல வேண்டுமென்றால் போயஸ் தோட்டத்திற்கு அடிப்படை தெரு மதிப்பு சதுர அடிக்கு ரூ.1.90 விண்ணை முட்டும் அங்காடிகளைக் கொண்ட தி.நகர் உஸ்மான்ரோட்டின் அடிப்படை தெரு மதிப்பு ரூ.1.25; வளம்மிகு அண்ணாநகர் இரண்டாவதுஅவின்யூவிற்கு தெரு மதிப்பு ரூ.1.25; ஆனால் மதுரவாயல் சுண்ணாம்புக்காரத் தெருவிற்கு தெரு மதிப்பு ரூ.1.25, புழுதி மண்டிக் கிடக்கும் ஆலந்தூர் எம்கேஎன்ரோட்டின் தெரு மதிப்பு ரூ.3.75; ஆதம்பாக்கம் ஏரிக்கரைத் தெருவின் தெரு மதிப்பு ரூ.3.75; ஆதம்பாக்கம், ஆலந்தூர், நங்கநல்லூர் தெருக்களின் குறைந்தபட்ச மதிப்பு ரூ.2.50)  

மேலும் அதிர்ச்சி!

இத்துடன் இது நின்றுவிடவில்லை. தெரு மதிப்பின் அடிப்படையில் உயர்வுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட வரி என்று புதிதாக வரி கணக்கிடப்பட்டு அதை எங்கள் 

ஆவணப்படி செலுத்த வேண்டிய திருத்தப்படாத வரி என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

இதன் மீது வரி உயர்வு செய்து அதை 50 சதவீதத்திற்கு மிகாமல் பார்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அதிகாரிகளை அணுகி 

விளக்கம் கேட்டபொழுது, நீங்கள் இதுவரை குறைவாக வரி செலுத்தியிருக்கிறீர்கள்; உண்மையாக எவ்வளவு செலுத்தியிருக்க வேண்டும் என்பதையே நாங்கள் கணக்கிட்டு

கூறியிருக்கிறோம்; அதன் மீதே உயர்வை செய்திருக்கிறோம் என்கிறார்கள். இதுவரை எப்படி குறைவாக செலுத்தியதாக கூறுகிறீர்கள், நீங்கள் நிர்ணயித்த வரியைத் தானே ஐயா இதுவரை செலுத்தினோம் எனும் போது நீங்கள் லஞ்சம் கொடுத்து வரியை குறைத்து மதிப்பிட்டிருக்கிறீர்கள் என்கிறார்கள். 

வரி உயர்வுக்கு முன்பு 500 சதவீதம் உயர்த்திவிட்டு அதில் 50 சதவீதம்தானே உயர்த்தினோம் என்று 750 சதவீதம் உயர்த்தியதற்கு வியாக்யானம் கொடுக்கிறார்கள். வரி உயர்வு அறிவிப்பு செய்த பொழுது மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்த அச்சம்உண்மையென நிரூபணமாகிவிட்டது.

இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் சொத்துவரி சீராய்வை நிறுத்தி வைக்க வேண்டும்; உண்மையான சீராய்வை செய்து முடித்தவுடன் அறிவிக்க வேண்டும்; இதற்கென புதிதாக ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்; பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் ஆகியோரை உள்ளடக்கியதாக அக்குழு இருக்க வேண்டும்; அக்குழுவானது சகல தரப்பினரையும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கோருகிறது. 

சீராய்வு செய்யும் போது தெருவின் வளர்ச்சியின் அடிப்படையில் ஒப்பீட்டளவில் தெரு மதிப்பு தீர்மானிக்க வேண்டும். ஒரே தெருவில் இருக்கும் வீடுகளில் கட்டிடத்தின் வயது அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். வருமான அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். வருவாய்த்துறை நிர்ணயித்த தெருவின் வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் இருக்க வேண்டும். இவைகளையெல்லாம் உள்ளடக்கி தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்றங்கள் தீர்மானிக்கிற வரிச் சீராய்வே ஏற்புடையதாக இருக்க முடியும் என்று மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் உயரதிகாரிகளுக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகள் மீதான வலுவான இயக்கத்தை களத்தில் நடத்திடவும், நீதிமன்றம் சென்று நியாயத்தை நிலை நாட்டிடவும் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியுடன் செயலாற்றிடும். 


நன்றி: விஜயன் உள்ளிட்ட தோழர்களின் கள ஆய்வு விவரங்கள்